Honda City Hybrid: ஹை-டெக் அம்சங்களுடன் சிட்டி ஹைப்ரிட் மாடல் - வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
Honda City Hybrid: அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமானதை அடுத்து இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் கார் மாடலாக புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் செடான் மாடல் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் 2020 ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை 2021 ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா கார்ஸ் திட்டமிட்டது.
எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகவும், உற்பத்தியில் பின்னடைவு காரணமாகவும் இந்த மாடல் வெளியீடு தாமதமாகி விட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமானதை அடுத்து இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் கார் மாடலாக புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் இருக்கிறது.
i-MMD ஹைப்ரிட் தொழில்நுட்பம்:
புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலில் ஹோண்டா நிறுவனத்தின் i-MMD ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இண்டர்னல் கம்பஷன் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை ஒருங்கிணைக்கிறது. அதன்படி ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 98 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோல் என்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் ஆக செயல்படுகிறது. இரண்டாவது எலெக்ட்ரிக் மோட்டார் 109 ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
முழு எலெக்ட்ரிக் திறன்:
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் மூன்று டிரைவ் மோட்கள் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹோண்டாவின் i-MMD ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஹோண்டா CR-V ஹைப்ரிட் மற்றும் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை நகர சூழலில் எலெக்ட்ரிக் திறனில் மட்டும் இயங்க செய்கிறது. இதனால் மைலேஜில் நல்ல சேமிப்பை பெற முடியும். நெடுஞ்சாலைகளில் ஹைப்ரிட் பவர்டிரெயின் காரின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
மேம்பட்ட ஸ்டைலிங்:
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் ஏற்கனவே மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அம்சங்கள் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் சிட்டி RS மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் இந்திய வேரியண்டிலும் இதே போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
தோற்றத்தில் புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் முன்புறம் ஸ்போர்ட் ஃபினிஷ் கொண் பம்ப்பர்களை இருபுறமும் கொண்டிருக்கிறது. இதன் கிரில், ORVM மற்றும் பம்ப்பர்களின் மீது பிளாக் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காரின் உள்புறத்திலும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இறுக்கிறது.
ஹோண்டா சென்சிங் தொழில்நுட்பம்
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் ஹோண்டா நிறுவனத்தின் சென்சிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. ஹோண்டா சென்சிங் என்பது ஆக்டிவ் பாதுகாப்பு அம்சங்கள் ஆகும். இதில் லேண் டிபாச்சர் வார்னிங், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்கிங், கொலிஷன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட முதல் ஹோண்டா கார் மாடலாக புதிய சிட்டி ஹைப்ரிட் இருக்கும்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் 250 முதல் 300 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.