மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு நிபந்தனையின்றி அனுமதியா? மத்திய அரசு கொடுத்த முக்கிய விளக்கம்!
5G சேவை காரணமாக சராசரி மொபைல் இன்டர்நேட் வேகம் அதிகரித்தது எனவும் மத்திய அரசு எடுத்துரைத்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 2 ஆண்டுகளுக்குப் பின்புதான் கட்டண உயர்வை அறிவித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவிக்க, எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுமதி வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் அறிவித்த கட்டண உயர்வு ஜூலை 3, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. 27 சதவீதம் வரை கட்டணம் கூடியிருப்பது பொதுமக்களுக்கு புதிய சுமையாக உள்ளது.
அரசு என்ன சொன்னது?
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ஒழுங்குமுறை அமைப்பு மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து தற்போதைய மொபைல் சேவைகளைச் செயல்படுகிறது எனவும் தொலைத்தொடர்பு சேவைகளின் விலை சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
"மொபைல் சேவைகளின் கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அத்தகைய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் இருக்கிறதா என்பதை டிராய் கண்காணிக்கும்" எனவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி இன்டர்நெட் வேகம் அதிகரிப்பு:
5G சேவை காரணமாக சராசரி மொபைல் இன்டர்நேட் வேகம் அதிகரித்தது எனவும் மத்திய அரசு எடுத்துரைத்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 2 ஆண்டுகளுக்குப் பின்புதான் கட்டண உயர்வை அறிவித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.
"கடந்த 2 ஆண்டுகளில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G சேவைகளை வழங்குவதில் அதிக முதலீடு செய்துள்ளன. இதன் விளைவாக, மொபைல் இணைய சேவையின் சராசரி வேகம் நொடிக்கு 100 MB அளவிற்கு கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 2022 இல் இந்தியா சர்வதேச தரவரிசையில் 111வது இடத்தில் இருந்து 15 வது இடத்துக்கு உயர்ந்துள்ளது" எனவும் கூறப்பட்டுள்ளது.