புதிய AI மாடலை செலண்டாக ரிலீஸ் செய்த கூகுள்! வார்த்தைகளை படமாக மாற்றி அசத்தும் Imagen 3!
கூகுள் தனது புதிய இமேஜ் ஜெனரேஷன் AI மாடலான Imagen 3 ஐ அறிவிப்பு இல்லாமல் வெளியிட்டுள்ளது. இந்த மாடல், டெக்ஸ்ட்-டு-இமேஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வார்த்தைகளை படங்களாக மாற்றுகிறது.
கூகுள் தனது புதிய இமேஜ் ஜெனரேஷன் செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான Imagen 3 ஐ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. ஆனால் கூகுள் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால், இந்த இமேஜ் ஜெனரேஷன் (Image Generation) மாடல் எப்படி செயல்படுகிறது என்பதை விவரிக்கும் கட்டுரை ஆன்லைன் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. வார்த்தைகளை படங்களாக மாற்றிக் கொடுக்கும் இந்த டெக்ஸ்ட்-டு-இமேஜ் (text-to-image) AI மாடல் இப்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
பிற பகுதியில் உள்ள பயனர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பயனர்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் பதிவு செய்தபின் படங்களை உருவாக்க முடியும். இந்த புதிய AI மாடலில் டெக்ஸ்சர் ஜெனரேஷன் (texture generation), சொற்களைப் புரிந்துகொள்ளும் திறன்கள் போன்றவை மேம்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மாடலை ரிலீஸ் ஆன உடனே பயன்படுத்திப் பார்த்த சிலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். "ஒரு கப் காபி வைத்திருக்கும் பையன்" என்ற எளிமையான கட்டளையை வழங்கினால் கூட இந்த AI மாடல் தவறான முடிவுகளைத் தருவதாக ஒரு பயனர் கூறியுள்ளார்.
ரெடிட் பயனர் ஒருவர் நிகான் டிஎஸ்எல்ஆர் குவாலிட்டி, கோப்ரோ ஸ்டைல், வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் பல போன்ற பல்வேறு வடிவங்களில் படங்களை உருவாக்க முடிந்தது என்று கூறுகிறார். இருப்பினும், பல நபர்கள் இருக்கும் படங்கள், குளோஸ்-அப் படங்கள் மற்றும் குறைந்த வெளிச்சம் கொண்ட படங்களை உருவாக்குவதில் இந்த AI மாடல் சுமாராகவே இருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார்.
கூகுளின் இன்னொரு செயற்கை நுண்ணறிவு தயாரிப்பான ஜெமினி சாட்போட் (Gemini chatbot) மூலமும் படங்களையும் உருவாக்க முடியும். இதுவும் ஜெமினியின் திறன்களைப் உள்ளட்டக்கியதுதான். ஆனால், இமேஜன் 3 (Imagen 3) மாடலின் தரவுத்தொகுப்பில் பெரும்பாலும் படங்களே இருப்பதால், இது படங்களை உருவாக்க சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது.