Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!
கூகுளின் Google Pixel 7 Pro ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்க்ரோலிங் செய்யும்போது சீரற்ற முறையில் இயங்குவதாக பயனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் 12 ஜிபி ரேம் ஸ்டோரேஜுடன் 84,999 ரூபாய்க்கு அறிமுகமானது. இது ஹேசல், அப்சிடியன் மற்றும் ஸ்னோ வண்ணங்களில் வருகிறது. இது 12GB ரேம் மற்றும் 128GB உள் சேமிப்பகத்துடன் ஆக்டா-கோர் டென்சர் G2 SoC மூலம் இயக்கப்படுகிறது.
இதில் ஆப்ஸ்களை ஸ்க்ரோல் செய்வதில் சிக்கல் இருப்பதாக பல்வேறு வாடிக்கையாளர்கள் புகார் அளித்து உள்ளனர். குறிப்பாக இந்தப் பிரச்சனை தற்போது ப்ரோ மாடலில் மட்டுமே உள்ளது. இதுதொடர்பாக கூகுள் பிக்சல் 7 ப்ரோவின் ஆரம்பகால பயனர்கள் சிலர் ரெடிட் மற்றும் ட்விட்டர் தளத்தில் ஃபோனின் டிஸ்ப்ளே தொடர்பான சிக்கல்களைப் புகாரளித்தனர்.
ஒரு ரெடிட் பயனர் கூறுகையில், டச் ஸ்கிரீனை ஸ்க்ரோல் செய்யும்போது விரலின் பின் பக்கவாட்டில் தொடர்ந்து ஒட்டிக்கொள்வதாகவும், தட்டச்சு செய்யும் போது விசைப்பலகை தடுமாறுவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், ஸ்க்ரோலிங் மிகவும் சீரற்றதாக இருப்பதாகவும், முக்கியமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் இந்த ஸ்க்ரோலிங் சிக்கல் அதிகமாக உள்ளதாகவும் அவர் புகார் அளித்து உள்ளார்.
இன்ஸ்டாகிராம் கேலரியில் வலது / இடதுபுறமாக ஃபிளிக் செய்யும் போது, அடுத்த படத்தைப் பார்ப்பதற்கு பயனர் தங்கள் விரல்களை அதிகமாக நகர்த்த வேண்டியுள்ளதாகவும், லேசாக நகர்த்தினால் திரை மாறாமல் அப்படியே இருப்பதாகவும் கூறுகின்றனர். சில நேரங்களில் மெதுவாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் அது மிகவும் வேகமாக நகரும் எனவும் புகார் அளித்து உள்ளனர்.
பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் HD+ (1,440 x 3,120 பிக்சல்கள்) LTPO OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இருப்பினும், டிஸ்ப்ளே தொடர்பான புகார் எழுந்துள்ளது. இதற்கு கூகுள் தரப்பில் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.