டோல் கேட்களை தவிர்த்து பயணம் செய்ய உதவும் கூகுள் மேப்ஸ்..!
கூகுள் மேப்ஸ் செயலியில் புது அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு சுங்கச் சாவடி கட்டணங்களை செயலியில் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் சுங்கச் சாவடிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தோராயமாக தொகை ஒன்றை கூகுள் மேப்ஸ் செயிலியில் தெரிவிக்கும் அம்சம் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி இந்த அம்சம் இந்திய பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியா மட்டும் இன்றி ஜப்பான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தோகையை கண்டறிந்து தெரிவிக்கும். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, அதற்கான கட்டணத்தை சுங்கச் சாவடிகளில் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறான பயண நேரங்களில் அடுத்த சுங்கச் சாவடியில் எவ்வளவு தொகை செலுத்த வேண்டி இருக்கும் என்ற கவலையை போக்கும் வகையில், கூகுள் மேப்ஸ் செயலியில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் அடுத்த சுங்கச் சாவடியை கடப்பதற்கு தேவையாண பணம் கையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பயன் தரும்.
எப்படி இயங்குகிறது?
பயணத்தை துவங்கும் முன்னரே கூகுள் மேப்ஸ் செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை காட்டி விடும். இதற்காக கூகுள் நிறுவனம் சுங்க அதிகாரிகளிடம் இருந்து பெறும் தகவல்களை கொண்டு சரியான விலையை பதிவிடுகிறது.
ஒரு வேளை சுங்க கட்டணத்தை தவிர்க்க விரும்பினால், அதற்கு ஏற்றார் போல் வேறு பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப்ஸ் வழி காட்டுகிறது. இதற்கு கூகுள் மேப்ஸ் செயலியின் ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து 'Avoid Tolls' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
2 ஆயிரம் சுங்க சாவடிகள்:
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுமார் 2 ஆயிரம் சுங்க சாலைகளில் உள்ள கட்டண விவரங்களை கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் பார்க்க முடியும். இது மட்டும் இன்றி இதே அம்சம் மேலும் பல்வேறு நாடுகளிலும் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.