Google Ads கூகிள் தேடலில் இனி விளம்பர முடிவுகள் (Sponsored Results) தொந்தரவு இருக்காது. தேவையற்ற விளம்பரங்களை மறைத்து, உண்மையான முடிவுகளை மட்டும் காண்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தாலும் சரி, கூகிள் தேடலில் ஒரு தகவலைத் தேடினாலும் சரி, விளம்பரங்கள் (Ads) எங்கும் நிறைந்திருக்கின்றன. கூகிள் தேடலின் முதல் சில முடிவுகளில் 'Sponsored' என்று ஒரு டேக் (Tag) இருக்கும். அவை பணத்திற்காக காட்டப்படும் விளம்பரங்கள்தான். இனிமேல், இந்த விளம்பரங்களை பயனர்களின் விருப்பப்படி கட்டுப்படுத்த முடியும் வகையில் கூகிள் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளம்பரங்களை மறைக்க ஒரு புதிய 'பட்டன்' வருகிறது!

கூகிள் தேடலில் விளம்பரங்கள் தெளிவாகத் தெரியும்படி அதன் 'Sponsored' என்ற லேபிளை எப்போதும் திரையில் இருக்குமாறு வைக்கிறது. ஆனால், இதைவிட பெரிய மாற்றம் என்னவென்றால், பயனர்கள் இப்போது கூகிள் ஸ்பான்சர் செய்த முடிவுகள் அனைத்தையும் மறைக்க (Hide) ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு முறை தேடும்போதும், எல்லா விளம்பர முடிவுகளையும் நீங்கள் ஒருமுறை ஸ்க்ரோல் செய்து கடந்த பின்னரே, இந்த விளம்பரங்களை மறைக்கும் பட்டன் தெரியும். அதை நீங்கள் கிளிக் செய்தால், அதற்குப் பிறகு உங்களுக்கு விளம்பரங்கள் இல்லாமல், நீங்கள் தேடிய தகவலுடன் தொடர்புடைய உண்மையான முடிவுகள் (Organic Results) மட்டுமே திரையில் தெரியும்.

சமீபத்திய கூகிள் தேடலில் ஏற்பட்ட மாற்றங்கள்!

கடந்த ஆறு மாதங்களில் கூகிள் தேடல் நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதலில், பயனர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமான பதில்களை வழங்க 'AI Overview' அறிமுகமானது. அதைத் தொடர்ந்து, தேடலிலேயே 'AI Mode' ஒருங்கிணைக்கப்பட்டபோது பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்த AI மோட், அனைத்து பதில்களையும் ஒரே இடத்தில் ஆதாரங்களுடனும் இணைப்புகளுடனும் வழங்கியது. இதன் காரணமாக, செய்தி நிறுவனங்கள் மற்றும் மீடியா தளங்களின் டிராஃபிக் (Traffic) வெகுவாகக் குறைந்ததால், அவை அதிர்ச்சியடைந்தன.

மீடியா நிறுவனங்களுக்கு இனி ஒரு புதிய நன்மை?

விளம்பர முடிவுகளை நீக்குவதன் மூலம், நீண்ட காலப் போக்கில் செய்தி நிறுவனங்களுக்குச் சற்று நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், விளம்பர முடிவுகள் மறைக்கப்படும்போது, பயனர்கள் உண்மையான தகவலுக்கான இணைப்புகளைப் பார்க்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம், பயனர்களும் மீடியா நிறுவனங்களும் எந்த அளவில் பயனடையப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.