சென்னை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து சவரன் 25 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தங்கம் விலை கடந்த மே மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. ஆனால், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நிலை மாறி தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3-ம் தேதி ஒரு சவரன் 24,608-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 4-ம் தேதி ஒரு சவரன் 24,776-க்கும், 5-ம் தேதி 24,928-க்கும், 6-ம் தேதி 24,976-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் 24,984-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 19 உயர்ந்து ஒரு கிராம் 3,142-க்கும், சவரனுக்கு 152 உயர்ந்து ஒரு சவரன் 25,136-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை சவரன் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 528 அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.