மொபைலை பத்திரமா அனுப்ப ரூ. 49 கொடுங்க - பயனர்களை போட்டுத் தாக்கும் ப்ளிப்கார்ட்!
ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக ரூ. 49 பேக்கேஜிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இனி ஸ்மார்ட்போன் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 49 செலுத்த தயாராகி விடுங்கள். ப்ளிப்கார்ட் தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும் ஸ்மார்ட்போன்களை பேக் செய்ய அந்நிறுவனம் கூடுதலாக ரூ. 49 கட்டணமாக வசூலிக்க துவங்கி இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 49 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ப்ளிப்கார்ட் விளக்கம்:
இதுவரை இல்லாமல், திடீரென ரூ. 49 கூடுதல் கட்டணம் வசூலிக்க ப்ளிப்கார்ட் விளக்கம் ஒன்றையும் கொடுத்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களை சுற்றி கூடுதலாக டேம்ப்பர்-ப்ரூஃப் பேக்கேஜிங் செய்யவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு பேக் செய்யும் போது ஸ்மார்ட்போன்களை தபால் வழியே அனுப்பும் போது எந்த சூழலிலும் ஸ்மார்ட்போனிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே பயனர்கள் ஸ்மார்ட்போன் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 49 செலுத்த வேண்டும்.
மேலோட்டமாக இது நல்ல நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போன்களுக்கு எந்த சேதமும் ஆகாது என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், இதுவரை ப்ளிப்கார்ட் அனுப்பிய பார்சல்களின் தரம் பற்றிய பல கேள்விகள் இந்த அறிவிப்புக்கு பின் எழுகின்றன. இதுவரை ப்ளிப்கார்ட் அனுப்பிய ஸ்மார்ட்போன் பார்செல்கள் தரமற்றதாக இருந்திருக்குமோ என பலர் கேள்வி எழுப்புகின்றனர். எனினும், இந்த கேள்விகளுக்கு எந்த விதமான பதிலையும் கூற இயலாது.
பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை ப்ளிப்கார்ட் பிரதய்கேமாக விற்பனை செய்து வருகிறது என்ற நிலையில், பயனர் விரும்பும் ஸ்மார்ட்போன்களை பத்திரமாக பெற்றுக் கொள்ள பேக்கேஜிங் கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த கட்டணம் தவிர ப்ளிப்கார்ட் இப்போதும் இலவச டெலிவரியை வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து விரைவில் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்யவும், ப்ளிப்கார்ட் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு என்ன செய்வது?
தற்போதைக்கு பேக்கேஜிங் கட்டணம் இன்றி ப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன் வாங்க முடியாது என்றே தெரிகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் வாங்க பல ஆயிரங்களை கொட்டிக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மிகப் பெரிய கட்டணமாக தெரியாது என்றே கூறலாம். அவ்வப் போது சிறந்த சலுகைகளை வழங்கி வரும் ப்ளிப்கார்ட் எதிர்காலத்தில் தனது லாபத்தை அதிக்கப்படுத்த இதுபோன்ற புதிய கட்டணங்களை மேலும் அறிமுகம் செய்யலாம் என்றே தெரிகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிடுவோர் ரூ. 49 கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. இப்போதைக்கு ப்ளிப்கார்ட் ரூ. 49 கூடுதல் கட்டணம் வசூலிக்க துவங்கி இருக்கும் நிலையில், வரும் நாட்களில் அமேசானும் இதேபோன்ற கட்டணத்தை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு அதிகம் தான்.