செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன், AI தொழில்நுட்பம் பரவலான வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார். AI நிறுவனங்களும் கோடீஸ்வரர்களும் மட்டுமே பயனடைவார்கள் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று அழைக்கப்படுபவரும் நோபல் பரிசு பெற்ற கணினி விஞ்ஞானியான ஜெஃப்ரி ஹின்டன், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் நிலையில், தொழில்நுட்ப துறையில் உள்ள கோடீஸ்வரர்களும் ஏ.ஐ. நிறுவனங்களும் மட்டும் பணக்காரர்களாவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு இழப்பு
கடந்த கால தொழில்நுட்ப மாற்றங்கள் வேலைகளை நீக்கியதுடன், புதிய வேலைகளையும் உருவாக்கியுள்ளன என்று சில பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், ஏ.ஐ. தொழில்நுட்பம் அதே வழியைப் பின்பற்றாது என்று ஹின்டன் சந்தேகம் தெரிவித்தார். அவர் வேலை உருவாக்கத்தின் மீதான தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியதுடன், பாரிய வேலையின்மை அபாயத்தை சுட்டிக்காட்டினார்.
ப்ளூம்பெர்க் டிவியின் 'வால் ஸ்ட்ரீட் வீக்' என்ற நிகழ்ச்சியில் பேசிய ஹின்டன், "பெரிய நிறுவனங்கள் ஏ.ஐ. மூலம் வேலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன், ஏனென்றால் அதன் மூலம்தான் அதிகமான பணம் வரப்போகிறது," என்றார்.
"இது மோசமானதற்கு காரணம், நம் சமூகம் அமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். அதனால் எலான் மஸ்க் போன்றவர்கள் (உதாரணத்துக்குச் சொல்கிறேன்.) மேலும் பணக்காரராவார்கள், ஆனால் பல மக்கள் வேலையற்றவர்களாக ஆவார்கள். அதைப் பற்றி மஸ்க் கவலைப்பட மாட்டார். இது ஏ.ஐ.யின் தவறு அல்ல, நாம் சமூகத்தை அமைக்கும் விதத்தின் தவறு," என்று அவர் மேலும் கூறினார்.
மனித உழைப்பை நீக்கும் AI
தற்போது, மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆல்பாபெட் மற்றும் அமேசான் போன்ற உலகின் நான்கு பெரிய ஏ.ஐ. நிறுவனங்களின் மூலதனச் செலவுகள் இந்த ஆண்டு $360 பில்லியனில் இருந்து அடுத்த நிதியாண்டில் $420 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"பணம் சம்பாதிக்க வேண்டுமானால், நீங்கள் மனித உழைப்பை நீக்க வேண்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று ஹின்டன் கூறினார்.
"சாட்போட்களைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிப்பதைத் தவிர, ஏ.ஐ.யில் பணம் சம்பாதிப்பதற்கான வெளிப்படையான வழி, வேலைகளை நீக்குவதுதான் என்று நான் கவலைப்படுகிறேன். ஒரு நிறுவனத்தை அதிக லாபம் உள்ளதாக மாற்றுவதற்கான வழி, தொழிலாளர்களை மலிவான ஒன்றைக் கொண்டு மாற்றுவதுதான். இதுவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்."
ஏ.ஐ.யின் வளர்ச்சியை நிறுத்த முடியாது
ஏ.ஐ. ஆனது சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் "அளவில்லாத நன்மைகளை" செய்ய முடியும் என்றும் ஹின்டன் குறிப்பிட்டார்.
ஏ.ஐ.யின் வளர்ச்சியை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் உறுதியான பதிலைத் தவிர்த்தார்.
"இது அணு ஆயுதங்களைப் போன்றது அல்ல, அணு ஆயுதங்கள் மோசமானவற்றுக்கு மட்டுமே பயன்படும். ஏ.ஐ. ஆனது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியில் மகத்தான நன்மைகளைச் செய்ய முடியும் என்பதால், இது ஒரு கடினமான முடிவு," என்று அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் துறையில் பெரிய ஆட்குறைப்புகள் நடந்து வரும் நிலையில், குறிப்பாக அமேசான் நிறுவனம் சமீபத்தில் 14,000 பணியிடங்களைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஹின்டனின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
