இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் சாட்ஜிடிபி சேவை முடங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ChatGTP Service Down Globally: நவீன காலத்துக்கு ஏற்ப Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில் சாட்ஜிடிபி ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி உலகளவில் முன்னணியில் உள்ளது. கல்வி, அரசியல், ஆரோக்கியம், விளையாட்டு என உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள் விவரங்களை சாட்பாட் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உலக அளவில் சாட்ஜிடிபி சேவை முடங்கியது
இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பாக செய்தி நிறுவனங்கள் சாட்ஜிடிபியை நம்பி செயல்பட்டு வரும் நிலையில், இன்று சாட்ஜிடிபி சர்வதேச அளவில் முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சாட்ஜிடிபி வேலை செய்யவில்லை எனவும் அது முடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இன்று மதியம் 2:45 மணி முதல் 500க்கும் மேற்பட்டோர் சாட்ஜிடிபியை உபயோகிக்க முடியவில்லை என Downdetector போன்ற தளங்கள் வாயிலாக புகாரளித்துள்ளனர்.
இந்தியாவில் சாட்ஜிடிபியை பயன்படுத்த முடியவில்லை
இந்தியாவில் ChatGPT இன் முக்கிய செயல்பாடுகளைப் பயன்படுத்துவதில் 82 சதவீதம் பேருக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன. சாட்ஜிடிபி மொபைல் செயலியில் 14 சதவீதம் பேர் சிக்கல்களை எதிர்கொண்டனர். 4 சதவீதம் பேர் API ஒருங்கிணைப்பில் சிக்கல்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை இந்திய நேரப்படி இன்று மதியம் 2.49 மணி முதல் 900க்கும் மேற்பட்டோர் சாட்ஜிடிபி வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவிலும் பயனர்கள் புகார்
அமெரிக்காவில் 93 சதவீதம் பேர் முக்கிய ChatGPT அம்சங்களை பயன்படுத்த போராடி வருகின்றனர். 6 சதவீதம் பேர் பயன்பாட்டு பிழைகள் குறித்து புகாரளித்துள்ளனர். 1 சதவீதம் பேர் உள்நுழைவு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். OpenAI இன் அதிகாரப்பூர்வ நிலைப் பக்கத்தின்படி, ChatGPT, Sora மற்றும் APIகள் உட்பட பல சேவைகளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க தொழில்நுட்பக் குழு முயன்று வருவதாக கூறப்பட்டுள்ளது. பிரச்சனை முழுவதுமாக தீர்ந்து சாட்ஜிடிபி எப்போது இயங்கும் என்ற காலக்கெடுவை OpenAIதெரிவிக்கவில்லை.
புலம்புத் தவித்து வரும் நெட்டிசன்கள்
திடீரென சாட்ஜிடிபி முடங்கியதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நெட்டிசன்கள் புலம்புத் தவித்து வருகின்றனர். ''சாட்ஜிடிபி வைத்து தான் இத்தனை நாள் கதையை ஓட்டிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவே முடங்கி விட்டதா என்னசெய்வதென்று தெரியவில்லையே'' என சிலர் வேடிக்கையான கமெண்ட்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
சாட்ஜிடிபி பயனர்கள் நம்பிக்கை
கல்விப் பணிகள் முதல் தொழில்முறை வேலை வரை பயனர்களின் அன்றாட வாழ்வில் ChatGPT போன்ற AI கருவிகள் எவ்வளவு ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை இன்றைய சாட்ஜிடிபி செயலிழப்பு எடுத்துக்காட்டியுள்ளது. சேவைகளை மீட்டெடுக்க OpenAI செயல்படுவதால், பயனர்கள் சாட்ஜிடிபி விரையில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.