ஸ்மார்ட்போன்களில் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் - வெளியானது மாஸ் தகவல்
ஆக்டிவிஷன் நிறுவனத்தின் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் கேம் ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆக்டிவிஷன் நிறுவனத்தின் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் விரைவில் ஸ்மார்ட்போன்களிலும் வெளியிடப்பட இருக்கிறது. புதிய கேமினை உருவாக்குவது மற்றும் வெளியிடுவதற்கு ஏற்ற குழுக்களுக்கு தேவையான ஊழியர்களை நியமனம் செய்யும் பணிகளையும் ஆக்டிவிஷன் துவங்கி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களுக்கான கால் ஆஃப் டியூட்டி வார்சோன் கேம் முழுக்க முழுக்க AAA கேமாக தான் இருக்கும் என ஆக்டிவிஷன் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் இந்த கேம் எப்போதும் விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் கேமர்களுக்காக உருவாக்கப்படுகிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.
கேம் உருவாக்க பிரிவில் அனுபவம் மிக்கவர்கள் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் உருவாக்கி வரும் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய முழு விவரங்கள் ஆக்டிவிஷன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
கால் ஆஃப் டியூட்டி வார்சோன் Free-to-Play பேட்டில் ராயல் ஸ்டைல் கேம் ஆகும். இது கணினி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் பிளே ஸ்டேஷன்களில் விளையாட இலவசமாகவே கிடைக்கிறது. தற்போது ஸ்மார்ட்போன்களுக்காக வெளியிடப்பட இருக்கும் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வெளியாகும் என தெரிகிறது. கால் ஆஃப் டியூட்டி வார்சோன் மொபைல் வெர்ஷன் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதவரை எந்த தகவலும் இல்லை.
கணினி மற்றும் கன்சோல் வெர்ஷன் ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் கால் ஆஃப் டியூட்டி மொபைல் வெர்ஷனும் விளையாட இலவசமாகவே வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் வெளியாகும் கால் ஆஃப் டியூட்டி வார்சோன் கிராஃபிக்ஸ் கணினி அல்லது கன்சோல் வெர்ஷனுக்கு இணையாக இருக்காது என்றாலும், இது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்றே தெரிகிறது.
கால் ஆஃப் டியூட்டி வார்சோன் மொபைல் பற்றி தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், இதன் வெளியீடு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெறும் என எதிர்பார்க்கலாம். புதிய மொபைல் வெர்ஷன் பற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படலாம்.