விரல்நுனியில் விண்வெளி மர்மங்கள்! மொபைல் ஆப் மூலம் விஞ்ஞானிகளுக்கு உதவலாம்!!
பிளாக் ஹோல் ஃபைண்டர் (Black Hole Finder) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் அனைவரும் புதிய கருந்துளைகளைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கருந்துளைகளைக் கண்டுபிடிப்பதில் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குழுவான டச்சு பிளாக் ஹோல் கன்சோர்டியம் சமீபத்தில் பிளாக் ஹோல் ஃபைண்டர் (Black Hole Finder) என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இது அனைவரும் புதிய கருந்துளைகளைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச மொபைல் ஆப் ஆண்டிராய்டு, iOS களில் கிடைக்கிறது. மேலும் இன்டர்நெட் பிரவுசர்களில் இருந்தும் பயன்படுத்தலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் பிளாக் ஹோல் ஃபைண்டர் பற்றி அளித்துள்ள தகவலின்படி, இந்தச் செயலி தொலைநோக்கிகள் மற்றும் பிற வானியல் ஆதாரங்களில் இருந்து உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தை ஆராயவும், மர்மமான மற்றும் கவர்ச்சிகரமான வான்பொருட்களைப் பற்றி அறியவும் உதவும் என்று கூறப்படுகிறது.
பிளாக் ஹோல் ஃபைண்டர், சிலி தொலைநோக்கி வரிசையான BlackGEM ஆல் பதிவுசெய்யப்பட்ட படங்களைக் காட்டுகிறது. இந்தத் தொலைநோக்கி 'கிலோனோவாஸ்' எனப்படும் அண்ட நிகழ்வுகளை வானத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த செயலியை உருவாக்கிய டெவலப்பர்கள் ஸ்பானிஷ், ஜெர்மன், சீனம், இத்தாலியன், போலிஷ் மற்றும் பெங்காலி மொழிகளைச் சேர்த்துள்ளனர்.
பல மொழிகளில் கிடைப்பதால் உலகளவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று அறிய ஒரு டுடோரியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷன் உண்மையான, போலியான மற்றும் அறியப்படாத பிளாக் ஹோல்களை வேறுபடுத்திப் பார்க்க பயனர்களுக்குக் கற்பிக்கிறது.
பயனர்கள் திரையில் காட்டப்படும் புகைப்படத்தைப் பார்த்து உண்மையான கிலோனோவா அல்லது இல்லையா என்று பதில் அளிக்க வேண்டும். பயனர்கள் அளிக்கும் இந்தப் பதில்கள் கருந்துளைகளின் பிறப்பைக் கண்டறியும் நோக்கில் இயந்திர கற்றல் அமைப்பிற்கு அனுப்பப்படுகிறது.
இந்த மொபைல் செயலியில் 1000 படங்களைப் பார்த்து அடையாளம் காணும் பயனர்களுக்கு "சூப்பர் யூசர்" அந்தஸ்து வழங்கப்படும். இதன் மூலம் இன்னும் அதிகமான தரவுகளைப் பார்வையிடுவதற்கான கோரிக்கையை வைக்கும் ஆப்ஷன் அவர்களுக்குக் கிடைக்கும்.
இந்தச் செயலில் பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளின் திட்ட மேலாளர் ஸ்டீவன் ப்ளூமென், பயனர்களின் பங்களிப்பு அல்காரிதங்களை மேம்படுத்த பிளாக் ஹோல்களை அறிய உதவுகிறது" என்று கூறுகிறார்.