அமெரிக்க முடிவால் நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்களை அழுத்தத்திற்கு ஆளாக்காது. பாகிஸ்தானின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு இராணுவமாக பலூச் படை செயல்படுகிறது.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பிறகு பலூச் விடுதலை இராணுவம் கடும் கோபமடைந்துள்ளது. பிஎல்ஏ அமைப்பையும், அதன் சிறப்புப் பிரிவான மஜீத் பிரிகேடையும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் அமெரிக்காவின் முடிவை பலூச் விடுதலை ராணுவம் நிராகரித்துள்ளது. பலூச் போராட்டத்திற்கு எதிரான பாகிஸ்தானின் ஒடுக்குமுறையில் அமெரிக்கா இணைந்துள்ளதாகவும் இது எங்களின் போராட்டத்தை பாதிக்காது என்றும் பலூச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பலூச் விடுதலை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாந்த் பலோச் கூறுகையில், ‘‘எங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியக்கூறுகளை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். அமெரிக்க முடிவால் நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்களை அழுத்தத்திற்கு ஆளாக்காது. பாகிஸ்தானின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு இராணுவமாக பலூச் படை செயல்படுகிறது. தாய்நாட்டின் விடுதலைக்கு உறுதிபூண்டுள்ளது. அதன் போராட்டத்தைத் தொடரும்.

1948-ல் பாகிஸ்தான், பலுசிஸ்தானை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். பலூச் விடுதலை ரானுவத்தின் போராட்டம் பலூச் தேசிய பெருமைக்காக. அதன் நோக்கத்தை நியாயப்படுத்த பலூச் விடுதலை ராணுவத்திற்கு எந்த வெளிப்புற அங்கீகாரமோ அல்லது எந்த சர்வதேச சான்றிதழோ தேவையில்லை.

பலுசிஸ்தானுக்குள் இருக்கும் பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் படை, அவர்களின் உளவுத்துறை வலையமைப்பை எங்கள் போராளிகள் குறிவைத்துள்ளனர். நாங்கள் பாகிஸ்தான் மக்களை எதிர்க்கவில்லை, எந்த உலக வல்லரசையும் எதிர்க்கவில்லை. எங்கள் தாய்நாட்டை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு எதிராக எங்கள் ஆயுதங்கள் முழுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

எங்கள் சித்தாந்த, இராணுவ 'புரட்சியில்' இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் . அமெரிக்காவின் நடவடிக்கையை நிராகரிக்கிறோம். பலுச் தேசிய விடுதலை, இறையாண்மை அடையப்படும் வரை, நாங்கள் எங்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வோம். எந்த உலக சக்தியும் என்ன சொன்னாலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல’’ என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பி.எல்.ஏ கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பலுசிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ஈரான், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளிலும் தீவிரமாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான அரசின்போது பலுச் தலைவர் நவாப் அக்பர் புக்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இந்தக் கிளர்ச்சி தீவிரமடைந்தது. சமீப காலமாக, இந்தக் குழு பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.