25 மில்லியன் டாலர் போச்சு... ஜூம் மீட்டிங்கில் டீப்ஃபேக் மூலம் நடந்த மெகா மோசடி!
டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் அந்த வீடியோ கான்பரன்ஸில் கலந்துகொண்டிருந்தனர். சக ஊழியர்களின் தோற்றம் டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்டவை என்று தெரியாமல் உண்மையானவை போலத் தோன்றின.
ஹாங்காங்கில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் நடந்த மோசடியில் 25.6 மில்லியன் டாலர் (சுமார் 200 கோடி ரூபாய்) பணத்தை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் போலீசார் கூறுகையில், வீடியோ கான்பரன்ஸில் நடந்த நிறுவன ஊழியர்களின் சந்திப்பில் கலந்துகொண்ட பல ஊழியர்கள் டீப்ஃபேக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அசல் போல உருவாக்கப்படும் போலியான போட்டோ, வீடியோ, ஆடியோ ஆகியவை டீப்ஃபேக் எனக் குறிப்பிடப்படுகின்றன. டீப்ஃபேக் போலியானவையாக இருந்தாலும், உண்மையானவை போலவே தோன்றும். இவை பெரும்பாலும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் நடந்துள்ள மோசடியில் குற்றவாளிகள் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுவில் கிடைக்கும் வீடியோ மற்றும் ஆடியோ காட்சிகளை டிஜிட்டல் முறையில் குளோன் செய்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் போல டீப்ஃபேக் உருவங்களை உருவாக்கி, அவற்றை வீடியோ கான்பரன்ஸில் தோன்ற வைத்துள்ளனர்.
இதனால் நிறுவனத்தின் நிதித்துறை ஊழியருக்கு, ஜனவரி மாத மத்தியில் பிரிட்டனில் உள்ள தலைமை நிதி அதிகாரியிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் ஒரு ரகசிய பணப் பரிவர்த்தனையை நடத்தும்படி கூறப்பட்டிருந்தது. பின்னர் ஜூம் மீட்டிங் தளத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற டிஜிட்டல் சந்திப்பில், அந்த நிதித்துறை ஊழியர் கலந்துகொண்டிருக்கிறார்.
டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் அந்த வீடியோ கான்பரன்ஸில் கலந்துகொண்டிருந்தனர். சக ஊழியர்களின் தோற்றம் டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்டவை என்று தெரியாமல் உண்மையானவை போலத் தோன்றின. இதனால் சந்திப்பின் உண்மைத்தன்மையை சந்தேகப்படாத நிதித்துறை ஊழியர் ஐந்து வெவ்வேறு ஹாங்காங் வங்கிக் கணக்குகளுக்கு 15 பரிவர்த்தனைகளில் மொத்தம் 25 மில்லியன் டாலர் தொகையை அனுப்பிவிட்டார்.
இந்த மோசடி ஏறக்குறைய ஒரு வாரத்தில் நடந்துள்ளது. இது ஒரு மோசடி என்று பாதிக்கப்பட்டவர் உணரும் தருணம் வரை பணப் பரிவர்த்தனை தொடர்ந்துள்ளது. வீடியோவில் தோன்றியவர்கள் சந்திப்புக்குப் பின்பும் மெசேஜ் மற்றும் ஈமெயில் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்த வழக்கை ஹாங்காங் போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.