iPhone design 2026 முதல் 2028 வரை ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள 3 பெரிய ஐபோன் வடிவமைப்புகள்: ஐபோன் ஃபோல்ட், பெசல் இல்லாத ஐபோன் 20, ஐபோன் ஃபிளிப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றம் வரவுள்ளது. கொரிய டிப்ஸ்டர் ஒருவரின் (Lanzuk) அறிக்கையின்படி, 2026 முதல் 2028 வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஐபோன் வடிவமைப்பை ஆப்பிள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மடிக்கக்கூடிய போன்கள் முதல், பெசல் (Bezel) இல்லாத டிஸ்ப்ளே கொண்ட போன் வரை ஆப்பிளின் மிரட்டலான திட்டத்தை இங்கே காணலாம்.
2026: ஐபோன் ஃபோல்ட் (iPhone Fold) வருகை
ஆப்பிளின் இந்த வடிவமைப்பு மாற்றங்களின் வரைபடம் 2026 இல் தொடங்குகிறது. முதல் மடிக்கக்கூடிய ஐபோனை ஆப்பிள் 'ஐபோன் ஃபோல்ட்' (iPhone Fold) என்ற பெயரில் வெளியிடவுள்ளது. இது ஒரு புதிய வடிவமைப்புடன் கூடிய ஆப்பிளின் மைல்கல் தயாரிப்பாக இருக்கும். LTPO+ OLED திரை கொண்ட இந்த போன், கிட்டத்தட்ட ஒரு ஐபேட் மினி (iPad Mini) அளவிற்கு விரிவடையும் திறன் கொண்டது. அதே ஆண்டில், ஐபோன் 18 தொடர் போன்களும் (iPhone 18, 18 Pro, 18 Pro Max) வெளியிடப்படும்.
2027: ஐபோன் 20 - எதிர்காலத்தின் பெசல் இல்லாத திரை!
வதந்திகளின்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 மற்றும் 19 தொடர்களைத் தாண்டி நேரடியாக ஐபோன் 20 தொடருக்கு (iPhone 20 series) தாவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் தொடங்கப்பட்டு 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2027 இல் அறிமுகப்படுத்தப்படலாம். ஐபோன் 20 தொடரில், முற்றிலும் பெசல் இல்லாத (Bezel-less) OLED திரை இடம்பெறும் என்றும், இது ஒரு முழுமையான எட்ஜ்-டு-எட்ஜ் காட்சி அனுபவத்தைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டைனமிக் ஐலேண்ட்டை (Dynamic Island) நீக்கிவிட்டு, அதைத் திரைக்கு அடியில் மறைந்திருக்கும் கேமராவாக மாற்ற ஆப்பிள் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2028: கிளாம்ஷெல் வடிவமைப்பில் ஐபோன் ஃபிளிப் (iPhone Flip)
2028 ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய சாதனத்தை 'ஐபோன் ஃபிளிப்' (iPhone Flip) என்ற பெயரில் அறிமுகப்படுத்தலாம். ஐபோன் ஃபோல்டில் இருந்து வேறுபட்டு, இது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip) போன்ற கிளாம்ஷெல் (Clamshell) வடிவமைப்பில் வரும். அறிவிப்புகளுக்காக ஒரு சிறிய வெளிப்புறத் திரையையும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) மூலம் இயக்கப்படும் AI ஷார்ட்கட்களையும் இது கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐபோன் 9 ஐபோன் X ஆனது போல...
ஐபோன் 19 என்ற பெயரைத் தவிர்த்து ஐபோன் 20 என நேரடியாக அறிமுகப்படுத்துவது, 2017 இல் ஐபோன் X (iPhone X) வெளியிடப்பட்டதை நினைவுபடுத்துகிறது. ஐபோனின் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, அப்போது ஐபோன் 9 தவிர்க்கப்பட்டது. இந்த புதிய தயாரிப்பு வரிசை, அடுத்த பத்தாண்டுகளில் ஸ்மார்ட்போன் புதுமைகளை ஆப்பிள் எப்படி மறுவரையறை செய்யத் திட்டமிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
