2022 ஆண்டின் மதிப்பு மிக்க பிராண்டு ஆப்பிள்
2022 ஆண்டு உலகின் மதிப்பு மிக்க பிராண்டுகள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்கான மதிப்பு மிக்க பிராண்டுகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. இந்த பட்டியலில் கூகுள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற பிராண்டுகள் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி இருக்கின்றன.
பிராண்டு டைரெக்டரி வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 355 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. இது ஆய்வறிக்கை விவரங்கள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலின் முதல் 5 இடங்களில் ஆப்பிளை தொடர்ந்து அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து சாம்சங், ஃபேஸ்புக், ஐ.சி.பி.சி., ஹூவாய் மற்றும் வெரிசான் உள்ளிட்டவை அடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பீடு 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பிராண்டு டைரெக்டரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிக மதிப்பீட்டை ஆப்பிள் பெற்று இருக்கிறது. "2021 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு மிக சிறப்பானதாக அமைந்தது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அளவு உயர்ந்தது."
"சிறப்பான பிராண்டு பொசிஷனிங் மூலம் ஆப்பிள் இத்தகைய வெற்றியை பதிவு செய்ய முடிந்தது. சமீபத்திய வளர்ச்சிக்கு ஆப்பிள் பிராண்டு பல்வேறு சேவைகளிலும் சிறப்பாக பொருந்த வைக்க முடியும் என்ற நிலையை எட்டியதையே காரணமாக கூற முடியும்," என பிராண்டு டைரெக்டரி தெரிவித்துள்ளது.
மதிப்பு மிக்க பத்து பிராண்டுகள் மட்டுமின்றி அதிவேகமாக வளர்ந்து வரும் பிராண்டு பற்றிய அறிவிப்பையும் பிராண்டு டைரெக்டரி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு அதிவேகமாக வளர்ந்து வரும் பிராண்டு என்ற பெருமையை டிக்டாக் பெற்று இருக்கிறது. டிக்டாக் பிராண்டு 215 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த பொழுதுபோக்கு செயலியின் மதிப்பு 18.7 பில்லியன் டாலர்களில் இருந்து 59 பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது.