ஸ்பீடு பிரேக்கரில் ஏறும் போது உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... பதறிய வாடிக்கையாளர்..!
மற்றொரு வாடிக்கையாளரும் தனது ஓலா ஸ்கூட்டரில் பயணித்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டர் உடைந்து போனதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மற்றொரு ஸ்கூட்டர் மாடல் ஓடும் போதே பாதி வழியில் உடைந்து விழுந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பற்றி சிலர் ட்விட்டர் தளத்தில் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது மற்றொரு வாடிக்கையாளரும் தனது ஓலா ஸ்கூட்டரில் பயணித்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டர் உடைந்து போனதாக குற்றம்சாட்டி உள்ளார்.
வழக்கறிஞரான பிரியண்கா பரத்வாஜ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பீடு பிரேக்கரின் மீது ஏறும் போது உடைந்து விழுந்ததாக குற்றம்சாட்டி உள்ளார். இதோடு ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புற டையர் உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
ட்விட்டரில் குற்றச்சாட்டு:
“எனது ஸ்கூட்டர் ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றும் போது தானாகவே உடைந்து விட்டது. உடனே ஏதே முறிந்தது போன்ற சத்தமும் கேட்டது,” என பிரியண்கா பரத்வாஜ் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். விபத்தில் தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், ஸ்கூட்டருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது, ஓலா எலெக்ட்ரிக் குழுவினர் அதனை விரைந்து சரி செய்து கொடுக்க பிரியண்கா பரத்வாஜ் தெரிவித்தார்.
இவரது ட்விட்டர் பதிவில் பலர் ஓலா ஸ்கூட்டர் மூலம் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிவித்தனர். மேலும் பலர் ஓலா ஸ்கூட்டர்களின் உற்பத்தி தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டினர். பிரியண்கா பரத்வாஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓலா எலெக்ட்ரிக், “இந்த பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நாங்கள் விரைவில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என தெரிவித்து இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் விளக்கம்:
முன்னதாக ஓலா ஸ்கூட்டர்கள் ஓடிக் கொண்டு இருக்கும் போதே பாதி வழியில் உடைந்து விழுவதாக வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஓலா எலெக்ட்ரிக் பதில் அளித்தது. அதன்படி, “ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள் அதிக தரம் கொண்ட, பாதுகாப்பான வாகனங்களை வழங்குவது மட்டும் தான். நாடு முழுக்க தற்போது ஓலா நிறுவனத்தின் 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் சாலையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓலா ஸ்கூட்டர்கள் 45 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளன. ஸ்கூட்டர் பாதி வழியில் உடைந்து போவதாக சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விபத்துக்கள் தான் காரணம். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடினமான பரிசோதனைகளை எதிர்கொள்கின்றன,” என்று ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருந்தது.