அட்ரா சக்க.... ஒரு தடவ சார்ஜ் போட்டா 600 கி.மீ செல்லலாமா - இந்தியாவில் எண்ட்ரி கொடுக்கும் BMW எலெக்ட்ரிக் கார்
பி.எம்.டபிள்யூ நிறுவனம் வருகிற டிசம்பர் 11-ந் தேதி தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பென்ஸ், ஜாகுவார், ஆடி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திவிட்டன. அந்த நிறுவனங்களுக்கு இணையான மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, தனது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது அந்நிறுவனம் வருகிற டிசம்பர் 11-ந் தேதி தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாம். அந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
பி.எம்.டபிள்யூ நிறுவனம் iX xDrive 40 மற்றும் iX xDrive 50 என இரண்டு வகையான எலெக்ட்ரிக் கார்களை தயாரித்துள்ளது. இதில் iX xDrive 40 வகை கார், 326 குதிரைத்திறனுடன் இயங்கக்கூடியதாகும். மேலும் இந்த கார் பூஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் எட்டிவிடுமாம். இந்த வகை காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 414 கி.மீட்டர் தூரம் வரை செல்ல முடியுமாம்.
அதேபோல் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் iX xDrive 50 வகை கார், 523 குதிரைத்திறனுடன் இயங்கக்கூடியதாகும். மேலும் இந்த கார் பூஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை 4.6 விநாடிகளில் எட்டிவிடுமாம். இந்த வகை காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 611 கி.மீட்டர் தூரம் வரை செல்ல முடியுமாம்.
இந்த இரண்டு கார்களிலும் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டர் செட்டப் உள்ளது. இந்த இரண்டு கார்களும் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கார்களின் விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பி.எம்.டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.