இந்தியாவுக்கு வரும் சூப்பர் ஸ்பீடு இன்டர்நெட் சேவை! ஸ்டார்லிங்க் - ஏர்டெல் இடையே ஒப்பந்தம்!

ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் உட்பட தொலைதூர பகுதிகளிலும் இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சேவையை மேம்படுத்தும்.

Airtel Ties Up With Elon Musk's SpaceX To Bring Starlink Internet In India sgb

இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவைகளைக் கொண்டு வருவதற்காக ஏர்டெல் (Airtel) நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கையெழுத்தாகும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் முதல் ஒப்பந்தம் இதுவாகும். இந்தியாவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் ஸ்டார்லிங்க் சேவை நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குதல், வணிக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழியாக ஸ்டார்லிங்க் சேவைகளை அளித்தல், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட குறித்து ஏர்டெல் ஆராய்கிறது. இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஸ்டார்லிங்க் சேவையைக் கொண்டு செல்ல ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

"இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவையை வழங்க ஸ்பேஸ்எக்ஸுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இன்டர்நெட் இணைப்பை வழங்குவதற்கு உறுதியுடன் இருக்கிறோம்" என்று பாரதி ஏர்டெல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான கோபால் விட்டல் கூறினார்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் உலகளாவிய மொபைல் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. உலகின் மிகவும் மேம்பட்ட இணைய அமைப்பின் உதவியுடன், ஸ்ட்ரீமிங், வீடியோ அழைப்புகள், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றுக்கு தங்குதடை இல்லாத இன்டர்நெட் சேவையைப் பெறலாம்.

"இந்த ஒத்துழைப்பு, இந்தியாவின் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கும் உலகத் தரம் வாய்ந்த அதிவேக பிராட்பேண்டைக் கொண்டு செல்லும். ஒவ்வொரு தனிநபரும் நிறுவனங்களும் சமூகமும் நம்பகமான இணைய சேவை பெறுவதை உறுதி செய்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் எங்கு வாழ்ந்தாலும், எங்கு வேலை செய்தாலும் மலிவு விலையில் நம்பகமான பிராட்பேண் சேவையைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்" என்று கோபால விட்டல் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸின் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான க்வின் ஷாட்வெல், இந்தியாவின் தொலைத்தொடர்பு வரலாற்றில் ஏர்டெல் முக்கிய பங்கு வகித்தது, எனவே ஸ்பேஸ்எக்ஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது என்றார். "ஏர்டெல்லுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று க்வின் ஷாட்வெல் கூறினார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தற்போது இந்தியாவின் பிராட்பேண்ட் சந்தையில் 14 மில்லியனுக்கும் அதிகமான வயர்டு சந்தாதாரர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. ஜியோ கிட்டத்தட்ட 500 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனர்களைக் கொண்டுள்ளது. ஏர்டெல்லும் கிட்டத்தட்ட 300 மில்லியன் பிராட்பேண்ட் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலங்களில் 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் முன்னேறும்போது ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை ஸ்டார்லிங்கிடம் பறிகொடுக்கும் அபாயம் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப்பில் புதிய மெட்டா AI விட்ஜெட்! பயன்படுத்துவது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios