Airtel ரீசார்ஜ் பிளான்களின் விலை உயர்வு?
ஏர்டெல் நெட்வொர்க்கில் ரீசார்ஜ் திட்டங்களின் விலை 300 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒரு பயனரிடம் இருந்து பெறும் சராசரி வருவாயை (ARPU) மாதத்திற்கு ரூ.300 ஆக உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு சராசரி வருவாயை மாதத்திற்கு 300 ரூபாயாக உயர்த்தினாலும், பயனர்கள் குறைந்த விலையில் மாதத்திற்கு 60GB வரை டேட்டாவை பெறலாம் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல்லை போல் வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய சூழலில் ஏர்டெல், ஜியோ மட்டுமே முன்னேறிய நிலையில் உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் அதிக வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, வருவாய் இழப்பைத் தவிர்க்கும் வகையில் காலப்போக்கில் Vi நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தலாம்.
கடந்தாண்டு இரண்டாம் காலாண்டின் நிலவரப்படி, ஏர்டெல்லின் ARPU ரூ. 190 ஆக இருந்தது, மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு ரூ. 177.2 என்று கூறப்படுகிறது. Vodafone-Idea (Vi) மிகக் குறைவாக ரூ.131 என இருந்தது. ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது ஜியோ, வோடஃபோன் ஐடியாவின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
5G திட்ட விலைகள் பற்றி என்ன?
5G திட்டங்களின் விலை அனைவருக்கும் மலிவு விலையில் இருக்கும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது, ஆனால் இதுவரை எந்த குறிப்பிட்ட விவரங்களையும் வழங்கவில்லை. ஜியோ நிறுவனம் உலகிலேயே தங்களது 5G திட்டங்களின் விலை மிகக் குறைவாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டபோது, ஏர்டெல் 4ஜி திட்டங்களின் விலையிலேயே 5ஜி திட்டங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. Vodafone-Idea 5G திட்டங்கள் அல்லது விலைகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.