Asianet News TamilAsianet News Tamil

‘இந்தியன் சாட்’ – நாசாவில் கரூர் மாணவர்கள் ஏவும் கையடக்க செயற்கைக்கோள்..!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள ‘இந்தியன் சாட்’ எனப்படும் செயற்கைக்கோள் கருவி, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆய்வுக்கலனில் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.
 

A handheld satellite launched by Karur students at NASA ..!
Author
Tamil Nadu, First Published Oct 15, 2020, 6:21 PM IST

தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அட்னான், அருண் மற்றும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்துவரும் கேசவன் ஆகியோர் குழுவாக இணைந்து உலகிலேயே மிகச் சிறிய அளவிலான சாட்டிலைட் கருவியை வடிவமைத்துள்ளனர்.

சாட்டிலைட்டிற்கு நாசா நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியோடு இக்குழுவினர் பேசினர். “எங்கள் மூவருக்கும் சிறுவயது முதல் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். 12ம் வகுப்பு படிக்கும்போது நானும், அட்னானும் இணைந்து இதேபோன்ற சிறிய வகை சாட்டிலைட் கருவியை வடிவமைத்தோம். ஆனால், அதன் செயல்திட்டம் தோல்வியில் முடிந்தது.A handheld satellite launched by Karur students at NASA ..!

இருந்தும் முயற்சி செய்வதை கைவிடவில்லை. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் அறிவியல் குறித்து அதிகமாகப் படிக்கத்துவங்கினோம். அப்போது தான் நாசா அமைப்பு நடத்தும் ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ எனும் மாணவர்களுக்கான விண்வெளி ஆராய்ச்சி போட்டி குறித்து தெரியவந்தது. புவியின் பல்வேறு தகவல்களை சேகரிக்க உதவும் சிறிய அளவிலான சாட்டிலைட் கருவியை உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம்.”

“மூவரும் தனித்தனியாக வேலைகளை பிரித்துக்கொண்டு வடிவமைக்கத் துவங்கினோம். சென்னையில் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு இத்திட்டத்தில் எங்களை வழிநடத்தியது. வடிவமைப்பு முடிந்ததும் நாசாவிற்கு அனுப்பினோம். சிறந்த சாட்டிலைட் என்ற அங்கீகாரத்ததோடு, அடுத்த ஆண்டு விண்வெளிக்கும் செல்லவிருக்கிறது நாங்கள் உருவாக்கிய சாட்டிலைட்” என பெருமிதத்துடன் கூறுகிறார், இக்குழுவின் டெஸ்டிங் இன்ஜினியர் கேசவன். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் “ஐ டூ லேர்னிங்” அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான விண்வெளி ஆராய்ச்சி போட்டியை நடத்துகிறது.A handheld satellite launched by Karur students at NASA ..!

‘க்யூப் இன் ஸ்பேஸ்’ எனும் இப்போட்டியில் 11 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் படைப்புகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் இந்தாண்டு 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, விண்வெளி சார்ந்த 80 படைப்புகள் பெறப்பட்டுள்ளது. கரூர் மாணவர்களின் ‘இ-சாட்’ எனப்படும் ‘இந்தியன் சாட்டிலைட்’ இப்போட்டியில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இ-சாட் கருவி குறித்து அதன் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் வடிவமைப்பாளர் அருன் விளக்கினார்.

“இரும்பை விட பத்து மடங்கு திடமான ரெயின்போர்சுடு கிராபைன் பாலிமரை பயன்படுத்தி 64 கிராம் எடையில், 3 செ.மி சுற்றளவில் இந்த சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளோம். இதில் 13 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பூமியின் வெப்பநிலை, புவி ஈர்ப்புத்திறன் மற்றும் காந்தசக்தி ஆகிய 20 வகையான தகவல்களை பெற முடியும். சூரிய சக்தியின் மூலம் இயங்குவதற்காக இதில் தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் உலகின் மிகச் சிறிய மற்றும் எடை குறைந்த முதல் சாட்டிலைட்டாக இது இருக்கும்” என தெரிவிக்கிறார் இவர். இ-சாட் தயாரிப்பில் பொருளாதார உதவிகள் தான் பெரும் சவாலாக அமைந்ததாக கூறுகிறார் இக்குழுவின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் அட்னான்.

“நாங்கள் மூவருமே சாதாரண பொருளாதார நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சாட்டிலைட் ஆராய்ச்சியில் பொருளாதார தேவைதான் எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிதி உதவி தேவைப்பட்டது. சுமார் 2 லட்சம் வரை ஆராய்ச்சி பணிக்காக இதுவரை செலவு செய்துள்ளோம். ஒரு கட்டத்தில் எனது அம்மாவின் நகைகளை அடகு வைத்து சாட்டிலைட் ஆராய்ச்சிக்கான கருவிகளை வாங்கினோம். எங்களின் குடும்பத்தினரும், கல்லூரி ஆசிரியர்களும், கல்வி அறக்கட்டளை நிறுவனங்களும் நிதி உதவி செய்தனர்.

 A handheld satellite launched by Karur students at NASA ..!

ரூ.1.35 லட்சத்தில் இந்த சாட்டிலைட்டை உருவாக்கி முடித்தோம். பல சவால்களைக் கடந்து இதை உருவாக்கியுள்ளோம். நாசாவின் போட்டியில் நாங்கள் வடிவமைத்த சாட்டிலைட் வெற்றி பெற்றதோடு, அடுத்த ஆண்டு விண்வெளிக்கும் அனுப்பப்படவுள்ளது எங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. எங்கள் குழுவிற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்”.

“ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் உதவியோடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அடுத்த திட்டத்தில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் வடிவமைத்த சாட்டிலைட் ராக்கெட்டில் ஏவப்பட்டதும் எங்களின் கனவுகள் நினைவாகிவிடும். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்” என மகிழ்ச்சியோடு கூறினார் அட்னான். சமூக வலைதளங்களில் இம்மாணவர்களுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios