2022 Audi A8 Facelift : சூப்பர் டிசைன்.. பவர்ஃபுல் என்ஜின்... புது ஆடி கார் டீசர் வெளியீடு..!
2022 Audi A8 Facelift : கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆடி நிறுவனம் தனது A8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது மாடல் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. வரும் வாரங்களில் 2022 ஆடி A8 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. புதிய 2022 ஆடி A8 ஃபேஸ்லிஃப்ட் மாடல் அந்நிறுவனத்தின் ஆடி A4, ஆடி A6 மற்றும் அல்ட்ரா-உபெர் ஆடி A8L போன்ற மாடல்களின் வரிசையில் இணைகிறது.
போட்டி நிறுவன மாடல்கள்:
அறிமுகம் செய்யப்பட்டதும் 2022 ஆடி A8 மாடல் இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மற்றும் பி.எம்.டபிள்.யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
அசத்தல் அம்சங்கள்:
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆடி நிறுவனம் தனது A8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. 2022 ஆடி A8 மாடல் பெரிய கிரில், மேம்பட்ட ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருப்பதால் கூர்மையாக காட்சியளிக்கிறது. இதில் உள்ள புதிய வீல்கள் காருக்கு மேலும் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
நிறங்கள்:
மேலும் இந்த காரில் OLED டெயில் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் வீல் ரேன்ஜ் 18 முதல் 21 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கிறது. 2022 ஆடி A8 மாடல் புதிதாக மெட்டாலிக் டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் ஃபிர்மனெண்ட் புளூ, மேன்ஹேட்டன் கிரே மற்றும் அல்ட்ரா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன்டேடோனா கிரே, ஃபுளோரெட் சில்வர், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் கிளேசியர் வைட் போன்ற மேட் ஃபினிஷ் ஷேட்களிலும் கிடைக்கிறது.
இண்டீரியர்:
புதிய ஆடி காரின் இண்டீரியர் அகலமாக காட்சியளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு உள்ளது. 2022 ஆடி A8 மாடலில் ஆப்ஷனல் கண்டினவஸ் செண்டர் கன்சோல், ஃபோல்டு-அவுட் டேபிள், 4 ஜோன் டீலக்ஸ் ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனிங், பின்புறம் 10.4 இன்ச ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 2022 ஆடி A8 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் புது ஆடி A8 மாடலில் 40 டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள், ஆடி பிரீ-சென்ஸ் பேசிக், ஆடி பிரீ-சென்ஸ் முன்புற சேஃப்டி சிஸ்டம்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
என்ஜின் விவரங்கள்:
2022 ஆடி A8 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3 லிட்டர் வி6 யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் கொண்ட வேரிண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.
மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 209 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட TFSI என்ஜின் ஆப்ஷிலும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.