Asianet News TamilAsianet News Tamil

மக்கள்தொகையில் 10,000 மரபணுக்கள் வரிசை ரெடி... பயன்கள் என்னென்ன? மத்திய அமைச்சர் விளக்கம்

99 சமூகங்களைச் சேர்ந்த 10,000 ஆரோக்கியமான நபர்களின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதன் மூலம் பல்வேறு இந்திய சமூகத்தினரின் மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.

10000 Genomes Of Indian Population Sequenced: Centre sgb
Author
First Published Feb 28, 2024, 1:15 PM IST | Last Updated Feb 28, 2024, 1:15 PM IST

விஞ்ஞானிகள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 10,000 இந்தியர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தி மரபணு அடிப்படையிலான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் உரையாற்றிய அமைச்ச்சர் ஜிதேந்திர சிங், மரபணு ஆய்வு  உலகெங்கிலும் உள்ள எதிர்கால சுகாதார உத்திகள், சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது என்றார்.

விஞ்ஞான ரீதியில் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா முன்னணி தேசமாக உருவாகி வருவதால், பிரச்சினைகளுக்கு சொந்தத் தீர்வுகளைக் காணவேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மொழி மற்றும் சமூகக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 99 சமூகங்களைச் சேர்ந்த 10,000 ஆரோக்கியமான நபர்களின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதன் மூலம் பல்வேறு இந்திய சமூகத்தினரின் மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.

130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 4,600 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளன எனக் குறிப்பிட்ட அமைச்சர், "தற்போதைய மக்கள்தொகையின் மரபணுப் பன்முகத்தன்மைக்கு இந்தக் காரணிகள் பங்களித்துள்ளன. இந்திய மக்கள்தொகை பல மாறுபாடுகளைக் உள்ளடக்கியது. பெரும்பாலும், இந்த குழுக்களில் சிலவற்றில் பல நோய்களை உண்டாக்கும் கூறுகள் உள்ளன. எனவே, மக்கள்தொகை அடிப்படையிலான அல்லது நோய் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை உலகின் பிற இந்தியர்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது" என்று எடுத்துரைத்தார்.

இந்திய மரபணுக்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் மக்கள்தொகையில் பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இருக்கும் தனித்துவமான மரபணு மாறுபாடுகளைப் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள உதவும் என்றும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தயாரிக்கவும் அதைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை குறைந்தது 1,00,000 மரபணுக்களை வரிசைப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட நாடுகள் ஆகும்.

பேராசிரியர் ஒய் நரஹரி மற்றும் டாக்டர் கே தங்கராஜ் ஆகியோர் ஜெனோம் இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். மரபணு பதிவுகளுக்கு அப்பால், 20,000 இரத்த மாதிரிகளை உள்ளடக்கிய ஒரு பயோபேங்க் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பயோடெக்னாலஜிக்கான பிராந்திய மையத்தில் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் இந்திய உயிரியல் தரவு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மரபணு வரிசைப்படுத்துதல் தரவுகள் சேமிக்கப்படுன்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios