காப்புரிமை மீறல்... X என்று பெயரை மாற்றி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட எலான் மஸ்க்!
ட்விட்டர் மீது யாரோ ஒருவர் வழக்குத் தொடர 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று வர்த்தக முத்திரை வழக்கறிஞர் ஜோஷ் கெர்பென் கூறுகிறார்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் பெயரை X (எக்ஸ்) என்று மாற்றியது அந்நிறுவனத்திற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எக்ஸ் என்ற பெயர் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக முத்திரைகளிலும் காணப்படுகிறது. இதனால், எலான் மஸ்க் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ட்விட்டர் என்று அறியப்பட்ட நிறுவனம் தற்போது X என்று மாறியுள்ளது. இதன் மூலம் புகழ்பெற்ற நீலக்குருவி லோகாவுக்கு ட்விட்டர் விடை கொடுத்திருக்கிறது. ட்விட்டர் பிராண்டை மாற்றி அமைக்கும் வகையில் அனைத்து பறவைகளுக்கு விடைகொடுக்க இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்ததை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், "ட்விட்டர் மீது யாரோ ஒருவர் வழக்குத் தொடர 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது" என்று வர்த்தக முத்திரை வழக்கறிஞர் ஜோஷ் கெர்பென் கூறுகிறார். அமெரிக்க வர்த்தக முத்திரை பதிவுகளின்படி, ஏற்கனவே X என்ற எழுத்தை பிராண்ட் பெயராகக் கொண்ட கிட்டத்தட்ட 900 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும் அவர் சொல்கிறார்.
85 நாட்களுக்குப் பின் மணிப்பூரில் இன்டர்நெட் தடை நீக்கம்! ஆனால் VPN பயன்படுத்தக் கூடாது!
பிராண்ட் பெயர்கள், லோகோக்கள் மற்றும் விளம்பர வாசகங்கள் போன்றவற்றை பிற பிராண்டுகள் பயன்படுத்துவது நுகர்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட பிராண்டின் உரிமையாளர்கள் உரிமை மீறல் வழக்கு தொடரலாம். இதற்கு பெரிய தொகையை அபராதமாக செலுத்துவது முதல் சர்ச்சைக்குரிய பிராண்ட் பெயரை பயன்படுத்த தடை விதிப்பது வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இச்சூழலில், எலான் மஸ்க் சந்திக்க இருக்கும் காப்புரிமை சிக்கல் அவரது போட்டி நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாப்ட் ஆகியவற்றில் இருந்தும் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் என்ற வீடியோ-கேம் வைத்திருக்கிறது. மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் ஏற்கெனவே ட்விட்டருக்கு வலுவான மாற்றாக உருவாகி இருக்கிறது. மெட்டாவின் மெய்நிகர் ஆராய்ச்சி நிறுவனமான மெட்டா எக்ஸ் (MetaX) பெயரிலும் X என்ற எழுத்து உள்ளது.
இந்த நிறுவனங்கள் எலான் மஸ்க் ட்விட்டரின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளதா என்று அறிய முயன்றதற்கு, இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.