சென்னை கோயம்பேட்டில் தமிழக அரசு பேருந்தை ஓடிசா இளைஞர் திருடிச்சென்றார். அந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Govt Bus Theft n Koyambedu: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, வேளாங்கன்னி, சிதம்பரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குளிர்சாதன பேருந்து ஒன்று கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு

அந்த பேருந்தை வழக்கமாக இயக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை எடுக்க நேற்று இரவு பணிமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து மாயமானது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ''இங்க தானே பஸ்சை நிப்பாட்டி இருந்தோம். எப்படி காணாமல் போயிருக்கும்'' என அவர்கள் குழப்பம் அடைந்தனர். பணிமனை மட்டுமின்றி பேருந்து நிலையம் முழுவதும் பார்த்தபோதும் அந்த பேருந்து இல்லை.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ்

இது குறித்து பணிமனை மேலாளர் ராம்சிங்கிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கோயம்பேடு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது மர்ம நபர் ஒருவர் பேருந்தை பணிமனையில் இருந்து ஓட்டிச் சென்றது தெரியவந்தது. பேருந்து எங்கே சென்றிருக்கும் என அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கிய நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தமிழ்நாடு காவல்துறைக்கு ஒரு தகவல் வந்தது.

நெல்லூரில் சிக்கிய பேருந்து

அதாவது கோயம்பேட்டில் இருந்து திருடப்பட்ட அரசு பேருந்து நெல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதை திருடிய நபரையும் கைது செய்ததாகவும் நெல்லூர் காவல்துறை சென்னை போலீசாருக்கு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார், நெல்லூருக்கு சென்று பேருந்தை மீட்டனர். மேலும், திருடிய நபரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பேருந்தை திருயது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான ஞானரஞ்சன் சாஹூ என்பது தெரியவந்தது.

காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி

காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானரஞ்சன் சாஹூ கூலி வேலை செய்து வந்துள்ளார். அவர் எதற்காக பேருந்தை திருடிச்சென்றார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பணிமனையில் 24 மணி நேரமும் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் கண்ணிலும், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் கண்ணிலும் மண்ணை தூவி ஞானரஞ்சன் சாஹூ பேருந்தை திருடிச்சென்றது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் கவனக்குறைவு

இது மட்டுமின்றி சென்னையில் இருந்து நெல்லூருக்கு கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவு இருக்கும். இடையில் டோல்கேட்டுகளும், போலீஸ் சோதனைச் சாவடிகளும் உண்டு. இவை அனைத்தையும் கடந்து பயணிகள் இல்லாத காலியான பேருந்தை அவர் ஓட்டிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே இந்த சம்பவத்துக்கு காரணம் என பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.