வேலூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீட்டு கட்டிய இளம்பெண்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வருபவர் அல்தாப் தாசின். இவரிடம் சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். மேலும் தனக்கு தெரிந்தவர்களையும் இந்த சீட்டு திட்டத்தில் சேர்த்து விட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டியுள்ளனர்.
சீட்டு நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் மீதி பணத்தை தரும்படி அல்தாப் தாசினிடம் தொடர்ந்து கேட்டு வந்தார். அதற்கு அவர் வேலூர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணும், அவரது தாயும் வேலூருக்கு சென்றுள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
அப்போது அல்தாப் தாசின், பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்சினை வரும். ஆகையால் விடுதிக்கு வாருங்கள் என்று இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு அந்த பெண்ணும், அவரது தாயாரும் விடுதிக்கு சென்றனர். அங்கு இருந்த அல்தாப் தாசின் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பணத்தை தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிறகு அந்த கும்பல் இளம் பெண்ணின் தாயை விடுதியில் வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்பு அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
வீடியோ எடுத்து மிரட்டல்
தொடர்ந்து அந்த கும்பல், ''உன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளோம். இதை வெளியே சொன்னால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம்'' என்று மிரட்டியுள்ளனர். இதன்பிறகு விடுதியில் இருந்து வெளியேறிய அந்த இளம்பெண், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலுார் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த விலையில், அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார், கிரிஜா, தேவி, புவனா ஆகிய 6 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
தமிழ்நாட்டில் அண்மைகாலமாக பாலியல் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தள்ளிவிட்ட சம்பவம், பள்ளியில் ஆசியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம என தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன.
பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அண்னாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
