நாட்டறம்பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயன்றதற்கு, ஆசிரியகள் மீது எந்தத் தவறுமில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மாணவிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜங்களாபுரத்தை சேர்ந்த மாணவி சந்தியா பிளஸ்–2 படித்து வந்தார். சந்தியா கடந்த சில மாதமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் மாணவியிடம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் நன்றாக படிக்கும்படி அவர்கள் பானியில் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த சந்தியா பள்ளிக்கூடத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீது எந்தவித தவறும் இல்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்தினர்.
பின்னர் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தை மாணவிகள் முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி, வாணியம்பாடி துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினர் பள்ளி நேரத்தில் தலைமை ஆசிரியர் அனுமதி பெறாமல் இதுபோன்ற ஊர்வலம் வர கூடாது என கூறி, மீண்டும் மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நாட்டறம்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கல்வி அலுவலர் பிரியதர்ஷினி கூறுகையில், ‘பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தி, யார் மீது தவறு உள்ளதோ? அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
