You have ruined our livelihood traders worry...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருந்த 30-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை வருவாய்த் துறையினர் அகற்றியதால் “வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது” என்று வியாபாரிகள் குமுறுகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நகரின் வெளிப்பகுதியில் புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் உணவு விடுதி ஒன்று இயங்கி வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே சாலை ஓரத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், நேற்று காவலாளர்களின் உதவியோடு வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள சாலையோரக் கடைகள் அனைத்தையும் "ஆக்கிரமிப்பு பகுதி" என்று என்று கூறி பொக்லைன் கொண்டு கடைகளை அதிரடியாக அகற்றினர்.
இதுகுறித்து, அப்பகுதி வியாபாரிகள், "மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து மருத்துவமனை எதிரே சாலையோரத்தில், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி கடைகள் நடத்தி வருகிறோம். ஆனால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். அதனால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
இதனால், மாவட்ட ஆட்சியர் பிரச்சனையில் தலையிட்டு அப்பகுதியில் மீண்டும் நாங்கள் கடைகள் நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
