திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் குடியரசு தினத்தில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக வழக்கம்போல் அறிவித்துள்ளன. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20) தொடங்கிய நிலையில், வழக்கம்போல் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கீதம் பாடவில்லை என்று கூறிய ஆர்.என்.ரவி, தான் பேசும் மைக் ஆப் செய்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, தற்கொலைகள் அதிகரிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது சுமத்தினார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்துக்கு மதிப்பு கொடுக்காமல் எதிர்க்கட்சிகளை போல் தமிழக அரசு மீது வெண்டுமேன்றே குற்றம்சாட்டி வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் குடியரசு தினத்தில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

திட்டமிட்ட அவை மரபு மீறல்

''ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள்தாம் முடிவு செயவர் என்பது காலம் காலமாக நடைமுறையிலிருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல ஆளுநர் உரை அமையவேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட அவை மரபு மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனங்கள். குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது'' என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்

''அரசமைப்புச் சட்ட பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ர‌வி அந்த பதவியை வகிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. அவரைப் போன்றவர்கள் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கும் எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்'' என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.