திருநெல்வேலி

மக்கள் விரும்பும் தங்கள் புகைப்படத்துடனோ தங்களது நண்பர்களுடன் கூடிய குழு புகைப்படத்துடனோ தபால் தலைகளை பெறும் திட்டம் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

"எனது தபால் தலை" திட்டத்தின் அறிமுக விழா திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில்  நேற்று நடைப்பெற்றது.

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் உதவி கண்காணிப்பாளர் வேதராஜன் அனைவரையும் வரவேற்றார். ஹோட்டல் "ஆப்பிள் ட்ரீ'" துணை பொதுமேலாளர் கமலகரன் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், "எனது தபால் தலை' திட்டத்தின்படி மக்கள் தங்களின் தனி அல்லது நண்பர்களுடன் கூடிய குழு புகைப்படங்களை தபால் தலையாக பெறலாம். அஞ்சல் அலுவலகத்துக்கு நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக புகைப்படம் எடுத்து தபால் தலை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் ரூ. 300. இந்தக்  கட்டணத்துக்கு உங்களுக்கு 12 தபால் தலைகள் கிடைக்கும்.

தென் மண்டலத்தில் மதுரை, கன்னியாகுமரி, கொடைக்கானல், விருதுநகரை தொடர்ந்து பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் "எனது தபால் தலை'  பெற விரும்பினால் நேரடியாக அங்கு சென்று வழங்கப்படும்.

100-க்கும் மேற்பட்ட தபால் தலைகளை ஆர்டர் செய்பவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த வசதியை மக்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று சந்திரசேகர் தெரிவித்தார்.

இதில், ஹோட்டல் ஆப்பிள் ட்ரீ'  இலச்சினை பதித்த தபால் தலையை திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வி.பி. சந்திரசேகர் வெளியிட, அதை ஆர்யாஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். சங்கர் பாபு பெற்றுக் கொண்டார்.    

இதில், பாளையங்கோட்டை அஞ்சல் கோட்டத்தின் உதவி கண்காணிப்பாளர் குமரன் நன்றித் தெரிவித்தார். பாளையங்கோட்டை அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி கனக சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.