ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
வெள்ளையங்கிரி மலைப்பகுதியில் 112 அடி உயர ஆதியோகி சிலையை ஈஷா யோகா மையம் அமைத்துள்ளது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது.
இதற்காக அவர் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கோவை வந்தனர்.
இதையடுத்து ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மேலும் ஆதியோகி சிவன்சிலை அருகே உள்ள மஹா யோக குண்டத்தில் ஜோதியை ஏற்றிவைத்தார் மோடி.
ஆதியோகி சிவன் சிலையை காண லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்தில் குழுமியுள்ளனர்.
சிலையை திறந்து வைத்த பிறகு மோடி மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மஹாசிவராத்திரியில் சிவனின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். பல கடவுள்கள் இருந்தாலும் மாகதேவன் ஒருவனே.
நல்லவற்றுக்காக போராடும் திறனை இறைவன் தருகிறார். நாம் ஒருங்கிணைந்த இந்த இடம், தம்மை அறிய ஒவ்வொருவருக்கும் உதவும்.
வேறுபாடுகளுக்கு அப்பால் பக்தியால் அனைவரும் ஒன்று பட்டிருக்கிறோம். இன்று யோகா பயிற்சி பரவலாகி வருகிறது. யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது.
மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதிமந்திரம். ஒரு ஜீவாத்மாவை பரமாத்மாவாக மாற்றுவது யோகா. நான் என்பதில் தொடங்கி நாம் என்பதில் முடிவது யோகா. என்னில் என்பதில் தொடங்கி நம்மில் என்பதில் முடிவது யோகா.
யோகா என்பது ஆரோக்கியத்திற்கான பாஸ்போர்ட். இது நோயிலிருந்து விடுபடுத்தக்கூடியது.
ஹிமாலயா – கன்னியாகுமரி இணைப்பு சிவன் - பார்வதி இணைப்பை போன்றது. வேற்றுமையை புறந்தள்ளி ஒற்றுமையை வரவேற்பதே நமது கலாசாரத்தின் சிறப்பு.
இயற்கை பாதுகாப்பை சிவராத்திரி வலியுறுத்துகிறது. காடு, மலை, மரம், பறவை உள்ளிட்ட இயற்கையின் அன்மீகமே கடவுளிலும் உள்ளது. கடவுள் எந்த வடிவில் இருந்தாலும் வழிபடுவது நமது பண்பாடு.
மூதாதையர்கள் வாழ்ந்த வழிமுறை இந்திய நாகரிகத்தின் உதாரணம். இவையெல்லாம் மூதாதையர்களின் வழிமுறை என காரணம் காட்டி ஒதுக்குவது ஆபத்தானது.
பெண்களின் முன்னேற்றம் இல்லையேல் மனிதநேயத்தில் முன்னேற்றம் இல்லை. கலாசாரத்தில் பெண்களின் பங்கு மையமானது. ஆனால், ஆண்கள் நன்மை செய்தால் மட்டுமே தெய்வீக அந்தஸ்தை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது.
புதிய சிந்தனைகளை வரவேற்பது நமது சமூகம். பழைமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுபித்து கொள்கிறோம்.
நவீன வாழ்க்கையுடன் புதிய நோய்களும் வருகின்றன. மன அழுத்தத்திற்கும் யோகாவே மருந்து.
யோகாவின் பெயரில் உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டும் யோகிகள் ஆகிவிட முடியாது. ஜூன் 21 சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது நமது சிறப்பு.
புதிய யுகத்தில் யோகாவின் துணையோடு மனித நேயத்திற்கு தேவையான அனைத்தையும் வளர்த்துகொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் உரையை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் தமிழில் வணக்கம் சொல்லி மக்களை அசத்தினார் பிரதமர் மோடி.
