சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் (27) இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில், காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவரான அருண்ராஜ் இன்று அதிகாலை 4.50 மணிக்கு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்  அருண் ராஜ், தற்கொலை செய்து கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.  சென்னை நகர போலீஸ் கமிஷனர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அருண்ராஜின் உறவினர்கள் கூறும்போது, அருண்ராஜ், சிறுவயது முதலே  விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளைக் குவிப்பார். போலீஸ் ஆக வேண்டும் என்பது அருண் ராஜின் கனவாக இருந்தது. அவரது கனவு நிறைவேறியும் உள்ளது.

தமிழக காவல் துறை தேர்வில் தேச்சி பெற்று காவலராக பணியில் சேர்ந்தார். காவல் துறை சார்பாக நடத்தப்படும், விளையாட்டு மற்றும் போலீஸ் பைக் அணிவகுப்பு போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வார்.

இவர் மிகுந்த மன உறுதியும் தைரியமும் கொண்டவர். இன்று காலை ஜெயலலிதா சமாதி முன்பு பணியில்இருந்தபோது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தகவலால் அதிர்ச்சியி அடைந்தோம். அருண்ராஜ் வேலை பலு காரணமாக இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பதை வெளிக்கொணர வேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

அருண்ராஜின் தந்தை மலைராஜன் பேசும்போது, அருண் நேற்றிரவுக்கூட என்னிடம் செல்போனில் பேசி பணம் அனுப்புவதாக கூறினார். அப்போது கூட இயல்பாகத்தான் பேசினார்.

உறவினர்கள் பற்றி எல்லாம் விசாரித்து மகிழ்ச்சியாக பேசியபின் போனை வைத்தார். இன்று காலை 6 மணிக்கு ஆயுதப்படை ஆய்வாளர் போனில் அழைத்து உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். 

அருண் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. என் மகனின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.