திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே அங்கு பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். ஜவுளி கடைகளிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் அடிப்படையில், மொத்தமாக நூல்களை கொள்முதல் செய்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் தற்போது, நூல் விலையில் ஏற்றம் , இறக்கம் காணப்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் நடந்தது. இந்நிலையில் மார்ச் மாதம் நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், நடப்பு மாதத்திற்கான அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவிற்கு ரூ.30 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ 20 வது நம்பர் கோம்டு நூல் ரூ.363க்கும், 24ம் நம்பர் ரூ.375க்கும், 30ம் நம்பர் ரூ.385 க்கும், 34ம் நம்பர் ரூ.405க்கும், 40ம் நம்பர் ரூ.425க்கும், 20ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.355க்கும், 24ம் நம்பர் 365க்கும், 30ம் நம்பர் ரூ.375க்கும், 34ம் நம்பர் ரூ.395க்கும், 40ம் நம்பர் ரூ.415க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்திருந்தது. ஆனால் 2022 ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையில் மூன்று மாதங்களில் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.30 வரையில் உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு தொழிற் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதம் ஏற்பட்டுள்ள விலை உயர்வால், புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும் எடுத்த ஆர்டர்களுக்கு தேவையான நூலை கொள்முதல் செய்யும் போது நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக தொழிற்சாலையினர் தெரிவித்துள்ளது.