Wreath on the wool 484 bulls on the field 127 Players - 46 in the hospital ...
சேலம்
சேலம், கூலமேட்டில் ஆராவாரத்துடன் நடந்த சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 484 காளைகளை 127 வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் அந்தக் காளைகள் முட்டியதில் 46 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சல்லிக்கட்டு போட்டி ஆராவாரத்துடன் நடைப்பெற்றது. இதற்காக கூலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது.
சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகளை போட்டியில் கலந்து கொள்வதற்காக அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பதிவு செய்தனர்.
அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்பு 484 காளைகள் சல்லிக்கட்டில் பங்கேற்றன. நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக சில காளைகளுக்கு சல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
இதேபோல, மாடுபிடி வீரர்களில் 450 பேர் பதிவு செய்திருந்தனர். மருத்துவக்குழுவினர் அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ததில், 127 வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டு 323 பேர் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.
சல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு கம்பி வலைகள் கட்டப்பட்டும் இருந்தன.
இதனையடுத்து சரியாக காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி, காவல் கண்காணிப்பாளார் ராஜன் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. முதலில் வந்த கோவில் காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின.
இருப்பினும், துள்ளி குதித்த காளைகளை, அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் சிலர் மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, குக்கர், மிக்சி, மின்விசிறி போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், ஆத்தூர் அருகே கீரிப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அருண்குமார் (26), அரியலூரை சேர்ந்த ராஜூ (26), தம்மம்பட்டியை சேர்ந்த பிரதாப் (22), லோகேஸ்வரன் (26), குணா (21), கூடமலை நிசாந்த் (25), புங்கவாடி ராமசாமி (46), கடம்பூர் ராஜமாணிக்கம் (23), சேஷன்சாவடி குமரேசன் (20), நாகியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (26), செந்தாரப்பட்டி வெங்கடேசன் (23) உள்பட 44 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த வீரர்களை மேல்சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4.40 மணிக்கு நிறைவடைந்தது.
