திருப்பூர்

திருப்பூரில் 18 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த தண்ணீரை பிடித்துச் சென்று ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதற்கு ஆட்சியர் எஸ்.ஜெயந்தி தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 60–வது வார்டுக்கு உட்பட்ட குளத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள், புழுக்கள் நெளிந்த தண்ணீர் பாட்டில்களைக் கொண்டுவந்தனர்.

பின்னர், ஆட்சியரிடம் அந்த தண்ணீரை காண்பித்து, இதுதான் எங்கள் பகுதியில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் என்று உரைத்தனர்.

பின்னர், ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், “எங்கள் பகுதியில் 18 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வரும் குடிநீரும் புழுக்களுடன் வருகிறது. அந்தக் குடிநீரைத்தான் பாட்டில்களில் பிடித்து இங்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், குடிப்பதற்கு குடிநீர் கூட எங்களுக்கு சரிவர கிடைக்காத நிலை உள்ளது.

மேலும், எங்கள் பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கு சுகாதார பணியாளர்கள் வருவதில்லை. சாக்கடை கால்வாய்களும் சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். குப்பை அள்ளுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.