தஞ்சாவூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இரயிலில் புறப்பட்டனர்.

டெல்லியில் நாடாளுமன்றத்தை அனைத்தத் தொழிற்சங்கத்தினர் நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், 

வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்,

தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், 

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18000 வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர், கும்பகோணம், செங்கிப்பட்டியில் இருந்து ஏறத்தாழ நூறு பேர் சோழன் விரைவு இரயில் மூலம் நேற்று புறப்பட்டனர்.  இவர்கள் அனைவரும் சென்னை சென்று அங்கிருந்து டெல்லிக்குச் செல்ல உள்ளனர்.

இவர்களில் தஞ்சாவூரில் இருந்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மாநிலச் செயலர் சி.சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர்.தில்லைவனம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகப் பொதுச்செயலர் துரை. மதிவாணன் தலைமையில் சுமார் 25 பேர் சென்றனர்.

இதேபோல், ஏ.ஐ.டி.யூ.சி. கும்பகோணம் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் 14 பேர் கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இரயிலில் புறப்பட்டனர்.