பெரம்பலூர்

பாடாலூர் கிராமத்தில் உள்ள இராகா மலையில் மீண்டும் கல் குவாரி அமைத்து கல்லுடைக்க அனுமதி கேட்டு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.அழகிரிசாமியிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள் பாளையம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். 

கடந்த பத்து ஆண்டுகளாக பாடாலூரில் கல் குவாரி அமைத்து, அதன்மூலமாக கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தோம். எங்களது வாழ்வாதாரமான கல் உடைக்கும் தொழில் இல்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். 

எனவே, பாடாலூரில் மீண்டும் கல் குவாரி அமைத்து, அதில் கல்லுடைக்க எங்களுக்கு அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.