கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து 2½ சவரன் நகையை பறித்துச் சென்ற பெண்கள் இருவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மூவேந்தர்நகர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சரோஜா (42). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்தார். 

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு பெண்கள் திடீரென சரோஜாவின் வீட்டின் முன்பு வந்து அவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே சரோஜாவும் வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பெண்களில் ஒருவர் சரோஜா கழுத்தில் இருந்த 2½ சவரன் நகையை பறித்தார். இதனால் அதிர்ந்துபோன சரோஜா அலறினார். உடனே அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதனிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. 

இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவலாளர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், நகையைப் பறித்துச் சென்ற அந்த இரண்டு பெண்களையும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

பெண்கள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் நடித்து நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.