தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டி, தலையில் வெற்றுக் குடங்களை வைத்துக் கொண்டு, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.  

சிதம்பரம் நகராட்சிக்கு உள்பட்ட 1–வது வார்டில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிக்க தண்ணீர் விநியோகிக்கப் பட்டது.

கடுமையான வறட்சி நிலவுவதால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெற்றுக் குடங்களுடன் திரண்டனர்.

பின்னர், அவர்கள், குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் கோட்டாட்சியர் விஜயலட்சுமியிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தனர்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விஜயலட்சுமி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மாநில துணை செயலாளர் குறிஞ்சிவளவன், மாவட்ட துணை செயலாளர் செல்வமணி மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.