திருத்தணி அருகே புதிய ரேசன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கக் கோரி ரேசன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் விலையில்லா வேட்டி, சேலை, விலையில்லா பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பு போன்றவை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், திருத்தணி வட்டம், பழையனூர் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்றுச் சென்றனர்.

அப்போது, புதிய ரேசன் அட்டைகளுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மாட்டோம் என ரேசன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்புகளை வழங்கக் கோரி, ரேசன் கடையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.