எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்ச்கர்கள் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை தரம் தாழ்ந்த, கேவலமான பேச்சு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ். பாரதி பலமுறை வருத்தம் தெரிவித்த போதிலும், இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளை அவர் கைவிடுவதாக இல்லை.

‘‘எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் இபிஎஸ் உருள்வாரா? என மோசமாக கேள்வி எழுப்பியுள்ளார் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, ‘‘நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதே நீதிபதிதான், பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும் என கூறினார். இதை பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என்றால், ஹெச்.ராஜா சாப்பிட்ட எச்சில் இலையில் இபிஎஸ் உருளுவாரா?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார் ஆர்.எஸ்.பாரதி.

திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, அரசியல் மேடைகளில் பேசும்போது பலமுறை சர்ச்சைக்குரிய, தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுகவை விமர்சிப்பவர்களை குறிவைத்து அவர் பேசியதாக இருந்தாலும் அவை இழிவானதாகவும் அவதூறாகவும் கருதப்படுகின்றன.

2020-ல் பட்டியலினத்தவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உயர்ந்தது ‘திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக எஸ்.சி/ எஸ்டி தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அவரது பேச்சை பட்டியலினத்தவரை அவமதித்தல்’ எனக் கடுமையாகக் கண்டித்தது. அதற்கு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தார்.

டிவி சேனல்களை "மும்பை விபச்சார விடுதிகள் போல" இயங்குவதாக ஒப்பிட்டு பேசியது கடும் விமர்சனத்தைத் தூண்டியது. இதற்கும் வருத்தம் அவர் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2023-ல் ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சிக்கும்போது, நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்று குறிப்பிட்டது சர்ச்சையானது. ஆளுநர் ரவி இதை கண்டித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘மூதேவி’ என்றும், எடப்பாடி பழனிசாமியை இழிவான வார்த்தைகளில் விமர்சித்தும் பேசியது சர்ச்சையானது.

"திமுக ஆட்சியில் கை வைத்தால் பாஜகவினர் உயிரோடு இருக்க மாட்டார்கள்" என வன்முறையைத் தூண்டும் வகையிலான அவரது பேச்ச சர்ச்சையானது. எதிர்க்கட்சித் தலைவர்களை உருவக்கேலி செய்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் எதிர்வினைகளை உருவாக்கியது. எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்ச்கர்கள் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை தரம் தாழ்ந்த, கேவலமான பேச்சு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ். பாரதி பலமுறை வருத்தம் தெரிவித்த போதிலும், இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளை அவர் கைவிடுவதாக இல்லை. அரசியலில் விமர்சனம் இயல்பு என்றாலும், இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவது அனைவராலும் தவிர்க்கப்பட வேண்டியதே. அதற்கு ஆர்.எஸ்.பாரதி மட்டும் விதிவிலக்கல்ல.