Women need to work in the wine shop - Controversy by leaflet

ஒயின்ஷாப் பார் வேலைக்கு பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியது தொடர்பாக இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில், குரங்கனி ஒயின் ஷாப் பார் திறக்கப்பட உள்ளதாகவும், இது பெண்களால் நடத்தப்படும் ஒயின் ஷாப் என்றும், இதனை தனலட்சுமி ஃபைனான்ஸ் விமல்ராஜ் குரூப்பால் நடத்தப்படுகிறது என்றும் விளம்பரம் செய்யப்படுள்ளது.

அந்த விளம்பத்தில் மேலும், கோவில்பட்டியில் உள்ள பிரபல ஓட்டல் தயாரிப்பான மதிய உணவு, கறி, மீன் வகைகள் உண்டு என்றும், வேலைக்கு பெண்கள் தேவை என்றும், வீட்டு பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கம்ப்யூட்டர் நன்கு தெரிந்த பெண்கள் வேலைக்கு தேவை என்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை தரப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம், சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவியது. இந்த விளம்பரம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவில்பட்டியில் உள்ள பிரபல ஓட்டர் நிர்வாகத்தின் உரிமையாளர் ராஜசேகர், எங்கள் அனுமதியின்றி எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்த கோவில்பட்டி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (எ) விமல்ராஜ் மற்றும் துண்டு பிரசுரத்தை அச்சிட்டுக் கொடுத்த வசந்த நகரைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டு பிரசுரம் விநியோகித்த செல்வராஜ் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.