சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மந்திரவாதி கார்த்திகேயன். இவர், பலரிடம் பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், புங்கனூர் கிராமம், தென்னாண்டை தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (24). மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம், கடந்த 12 ஆம் தேதி கோபிநாத் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், மகா காளி மந்திராலயம் என்ற விளம்பரத்தைப் பார்த்து, பெரம்பலூரில் தங்கியிருந்த மந்திரவாதி கார்த்திகேயனை நேரில் சந்தித்தேன். இவருக்கு பல ஆயிரம் இளைஞர்களும், குடும்ப பெண்களும் பக்தர்களாக உள்ளனர்.

அப்போது எங்கள் குடும்பத்தால் விற்பனை செய்ய முடியாமல் இருந்து வந்த நிலத்தை விற்பதற்கு வழிகேட்டபோது, என் குடும்ப பிரச்சனைகளை மந்திரத்தின் மூலம் தீர்ப்பதாக சொன்னார்.

அவர் கூறியதை நம்பி முதலில் ரூ. 15 ஆயிரத்தில் ஆரம்பித்து, ரூ.5 லட்சத்து, ரூ.12 ஆயிரம் வரை சிறிது சிறிதாக பணத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் மாந்திரீகத் தொழிலில் பெண்ணின் சடலத்தை வைத்து பூஜை நடத்திய நிலையில் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலையின்போது எனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். இந்த சமயத்தில் மோசடி புகாரில் கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைத்தனர்.

பணத்தை சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திருப்பித் தருவதாக கார்த்திகேயன் என்னிடம் கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தை உடைத்து ஜாமினில் வெளியே வந்த கார்த்திகேயன், 2 தவணைகளில் பணம் தருவதாக எஸ்.ஐ. அகிலன் முன்னிலையில் என்னிடம் உறுதி கூறினார். 

இது தொடர்பாக நான் 20 முறைக்குமேல் அலைந்தும் இப்போது வழக்கு முடியட்டும் தருகிறேன் என்று கூறி வருகிறார். இப்போது பணத்தைவிட ஆபத்தாக பல இளைஞர்களையும், பெண்களையும மாந்திரீகம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்து வருகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், குடும்ப பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. கோபிநாத்தின் இந்த புகாரை அடுத்து, மந்திரவாதி கார்த்திகேயனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.