தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கு எடுக்கும்போது 18 வயதுக்கு முன் பெண்கள் திருமணம் பூஜ்யம் என்ற இலக்கை அடையப் பாடுபட வேண்டும் என அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் மருத்துவர் பெ.ரங்கநாதன் தெரிவித்தார்.

நாமக்கல் அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா செவிலியர் கல்லூரி சார்பில் நாமக்கல் அருகே சங்களாபுரத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்களாபுரம் கிராமப் பிரமுகர் கொண்டப்பநாயக்கர் தலைமை வகித்தார்.

முதலில் குழந்தைகள் திருமணம், பெண் சிசுக் கருக்கொலை தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 1098 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துத் திருமணத்தைத் தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் மருத்துவர்.பெ.ரங்கநாதன் பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது:

“இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி தமிழகத்தில் 14 வயதுக்குக் குறைவான குழந்தைகள் திருமணம் 85 ஆயிரம் பேருக்கு நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் மக்கள் தொகையில் 2.65 இலட்சம் பேர் திருமணமானவர்கள்.

18 வயதுக்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும்.

புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் நம் பெண் குழந்தைகள் குழந்தைகளைச் சுமக்கும் தாயாக உலவி வருவது வேதனைக்குரியது. பெண் குழந்தைகளின் கனவு சிதைக்கப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கு எடுக்கும்போது 18 வயதுக்கு முன் பெண்கள் திருமணம் பூஜ்யம் என்ற இலக்கை அடையப் பாடுபட வேண்டும்” என்று அவர் பேசினார். 

பள்ளித் தலைமையாசிரியர் பொன்னுசாமி, செவிலியர் கல்லூரி விரிவுரையாளர்கள் நாகேஸ்வரி, ராசாத்தி, கல்லூரி மாணவியர் பங்கேற்றனர்.