தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

கடந்த மாதம் 30ம் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விவசாயம் இல்லாமல் இந்த நாடு முன்னேறாது. விவசாயத்தை ஒழித்துவிட்டு பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும். அந்த பணத்தையா சாப்பிட முடியும்? என்பதை உணர்த்தும் விதமாக இலைகளில் பணத்தை வைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டனர். இன்று 18-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.