மதுரை

மதுரையில் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளைஞரை விரட்டிப் பிடித்த மக்கள் தரும அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், திருநகர் அடுத்த கப்பலூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (27). நேற்று திருப்பரங்குன்றம் சாலை மதுரை கல்லூரி எதிரே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியை ஒருவர் வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்போது அப்பகுதி மக்கள், முத்துலட்சுமியை வெட்டிய நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில், பிடிபட்டவர் வாடிப்பட்டியை அடுத்த சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (35) என்பதும், இவர் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. 

முத்துலட்சுமிக்கும், அவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அவர் சந்திரசேகரிடம் சரியாக பேசாததால் ஆத்திம் அடைந்த சந்திரசேகர், முத்துலட்சுமியின் செல்போனை பறித்து கொண்டு சென்றுவிட்டார். 

பின்னர், தனது போனை கொடுக்கும்படி முத்துலட்சுமி கேட்டதற்கு நேற்று காலை சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமியை, சந்திரசேகர் சரமாரியாக வெட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.