தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

கடந்த மாதம் 30ம் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், வாழை இலையில் மண் வைத்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “ஓ.என்.ஜி.சி. ஆய்வால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் காவி நிறமாக மாறி உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் போதிய அளவு வருவதில்லை. மழையும் குறைந்துவிட்டது. இதனால் நிலத்தடி நீரை நம்பிதான் வாழ வேண்டிய நிலை உள்ளது. ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகள் தொடர்ந்தால் உண்பதற்கு உணவு இல்லாமல் மண்ணை தான் சாப்பிட வேண்டிய நிலை வரும்.

இதனை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து இயற்கையை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. இதை உணர்த்தும் வகையில் தான் மண்சோறு சாப்பிடுகிறோம் என்றனர்.

இதற்கிடையில், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிரிவத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனின் தந்தை இறந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஜெயராமன் 3 நாள் பரோலில் சென்றார். இறுதி சடங்கு முடிந்துநேற்று திருச்சி சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.