தன்னை இரண்டாவதாக திருமணம்செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து நச்சரித்து வந்த இளம் பெண்ணை குக்கரால் தலையில் ஒரே அடி அடித்து கொன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம், கடந்த 28ஆம் தேதி, எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் எரிக்கப்பட்டதால், பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் மாயமான பெண்கள் தொடர்பான புகார்களை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். எரிக்கப்பட்ட சடலத்தின் பற்களில் கிளிப் மாட்டியிருந்ததால்,  மாயமான பெண்ணின் அடையாளங்களோடு ஒப்பிட்டு விசாரித்தபோது சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷமேரி என்பவர் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

கடந்த 26-ம் தேதி வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொக்கிஷ மேரி அதன் பிறகு வீடு திரும்பிவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து  அவரது பெற்றோர் கடந்த 1-ம் தேதி தான் புகார் கொடுத்தனர்.

பொக்கிஷமேரியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் கோயம்பேடு சென்று, பின்னர் அங்கிருந்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் சென்றிருப்பது தெரியவந்தது. இறுதியாக செல்போன் சிக்னல் காண்பித்த வீட்டில் உள்ள நபரை பிடித்து விசாரித்தபோது, அவரது முன்னாள் காதலன் பாலமுருகன் என்பவர்தான் பொக்கிஷ மேரியை அழைத்து வந்தது தெரியவந்தது.

அப்பல்லோ பார்மஸியில் வேலை பாரத்த பாலமுருகனும், பொக்கிஷமேரியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலில் பிரச்னை ஏற்பட 8 மாதங்களுக்கு முன்னர் பாலமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் பொக்கிஷ மேரியிடம் பேச வேண்டும் என  தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் பாலமுருகன். . அங்கு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பொக்கிஷ மேரி , பாலமுருகனை நச்சரித்தாக கூறப்படுகிறது..

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன்,குக்கரால் தாக்கியதில் பொக்கிஷமேரி உயிரிழந்தார். பின்னர் பொக்கிஷமேரி உடலை டிராலி பேக்கில் வைத்து காரில் கொண்டு சென்ற பாலமுருகன், செங்கல்பட்டு அருகே பழவேலியில் வைத்து, அடையாளத்தை மறைப்பதற்காக எரித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து  அண்ணா நகர் போலீசார் கொலை செய்த பாலமுருகனை கைது செய்தனர்.