Asianet News TamilAsianet News Tamil

சி.டி. கடைக்காரரை மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர்; ஏட்டு கைது; வசமாக சிக்கினர்...

Woman inspector and ettu arrested for bribe 5000 from CD shop men
Woman inspector and ettu arrested for bribe 5000 from CD shop men
Author
First Published Feb 22, 2018, 8:02 AM IST


விருதுநகர்

சி.டி. கடைக்காரரை மிரட்டி மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டு பணத்தை வாங்கிய அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பெண் ஆய்வாளர் மற்றும் ஏட்டு இருவரும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(31). இவர் சிவகாசியில் சி.டி.கடை வைத்துள்ளார். இவரது கடையில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கமலி கடந்த சில நாள்களுக்கு முன்பு சோதனை நடத்தினார். அந்த சோதனையில் இவரது கடையில் இருந்து திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரகாஷிடம் தொடர்ந்து சி.டி. வியாபாரம் நடத்திட, சோதனை நடத்தாமல் இருக்க மாதம் ரூ.5000 இலஞ்சம் தர வேண்டும் என்று ஆய்வாளர் கமலி கேட்டுள்ளார்.

மாதம் ரூ.5000 இலஞ்சம் தர விரும்பாத பிரகாஷ், விருதுநகர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தார். இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பிரகாஷை ரூ.5000-துடன் விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி காவேரி தெருவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு சென்று கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி நேற்று பிரகாஷ் அந்த காவல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஆய்வாளர் கமலி மற்றும் காவல் ஏட்டு முருகேசன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் தனது கடையில் சோதனை நடத்தாமல் இருக்க நீங்கள் கேட்டபடி ரூ.5000 கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

ஆய்வாளர் கமலி ரூ.5 ஆயிரத்தை ஏட்டு முருகேசனிடம் கொடுக்குமாறு கூறினார். அதன்படி முருகேசனிடம் பிரகாஷ் பணத்தை கொடுத்தார். முருகேசனும் பணத்தை பெற்றுக் கொண்டு இனி தொந்தரவு இருக்காது என்று பிரகாஷிடம் கூறினார்.

அப்போது, அந்த அலுவலகம் அருகே பதுங்கி இருந்த இலஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் அலுவலகத்திற்குள் விரைந்து சென்று ஏட்டு முருகேசனை பிடித்து ரூ.5000-ஐ பறிமுதல் செய்தனர்.

அவர் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் ஆய்வாளர் கமலி அறிவுறுத்தலின்பேரிலேயே இலஞ்சப் பணத்தை பெற்றதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் கமலி(43), ஏட்டு முருகேசன்(45) ஆகிய இருவரையும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் கைது செய்தனர்.

கைதான ஆய்வாளர் கமலி மதுரை கண்ணனேந்தலை சேர்ந்தவர். இதற்கு முன்பு அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றினார். காவல் ஏட்டு முருகேசன் பரமக்குடியை சேர்ந்தவர். சமீபத்தில்தான் இந்த பிரிவிற்கு மாறுதலாகி வந்துள்ளார்.

ஆய்வாளர் கமலி, ஏட்டு முருகேசனிடம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios