Asianet News TamilAsianet News Tamil

நகை திருடுபோய்விட்டதாக கூறி கடத்தல் நாடகம்...! செல்போனில் ஆண் குரலில் பேசி கணவனை மிரட்டிய பெண் கைது...!

Woman arrested in Nagercoil
Woman arrested in Nagercoil
Author
First Published Jun 6, 2018, 11:15 AM IST


நாகர்கோவிலில், கடன் பிரச்சனையை தீர்க்க கணவருக்கு தெரியாமல் செல்போனில் வாய்ஸ் சேஞ்ச் அப்ளிகேஷன் என்னும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை மற்றும் கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பெண்ணின் நாடகம் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். இவரது மனைவி தங்கம் (39). இவர் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று இவரது வீட்டில் இருந்து 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போயுள்ளது. இது குறித்து ரமேஷ் போலீசில் புகார் கொடுத்தார். ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், கொள்ளைக் குறித்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன் மனைவியை கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து ரமேஷ் மீண்டும் போலீசாரிடம் கடத்தல், மிரட்டல் குறித்து புகார் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி முதல் ரமேஷின் மனைவி தங்கம் மாயமானார். அதைத் தொடர்ந்து ரமேஷின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் தங்கத்தை கடத்தி இருப்பதாகவும் கொள்ளை சம்பவ புகாரை திரும்பப்பெறவில்லை என்றாலும், மீண்டும் போலீசாரிடம் சென்றாலும் உனது குழந்தைகளையும் கடத்துவேன் என கூறி விட்டு தொடர்பை துண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், 3 ஆம் தேதி அன்று ரமேஷின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம மனிதர் தங்கத்தை ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டு இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார். போலீசாரின் உதவியுடன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் ஆரல்வாய்மொழி சென்று தங்கத்தை மீட்டனர். அப்போது தங்கம் மொட்டை தலையுடனும், போதையுடனும் காணப்பட்டார்.

பின்னர் தங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு தங்கத்திடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னை கடத்தியவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் காரில் வைத்து போதை ஊசி போட்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கம் கூறியதை அடுத்து, போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் விசாரணை நடத்தினர். அங்குள்ள கடைகளில் விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு நாட்களாக தங்கம் தனியாக இப்பகுதியில் நடமாடியதை பார்த்ததாகவும், பேருந்து நிறுத்தத்திற்கு தனியாக வந்து அமர்ந்து இருந்ததாக தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கத்திடம், போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு சுயஉதவி குழுக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை கணவருக்கு தெரியாமல் வட்டிக்கு விட்டதாகவும், வட்டிக்கு வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் கடன் சுமை ஏற்பட்டதாகவும், இந்த பிரச்சனையை தீர்க்க வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கணவர் ரமேஷ், போலீசில் புகார் அளித்ததால் அதில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் சென்று மொட்டை அடித்துவிட்டு கடத்தல் நாடகம்
ஆடியதாகவும் தெரிவித்தார். மேலும் கணவர் போலீசாரிடம் சொல்லாமல் இருக்க செல்போனில் வாய்ஸ் சேஞ்ச் அப்ளிகேஷன் மூலம் ஆண் குரலில் பேசி மிரட்டியதாகவும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து தங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டு கணவருக்கு தெரியாமல் செய்த தவறுகளால் பல்வேறு நாடகங்களை நடத்தி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில், கடத்தல் நாடகம் அம்பலமாகி இப்போது தங்கம் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios